அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு (FLNAT) உல்லாஸ் – நவ பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது .

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உல்லாஸ் – நவ பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் (நவ் பாரத் சாக்ஷர்தா கார்யக்ரம்) ஒரு பகுதியாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வை (FLNAT) 23 மாநிலங்களில் நாளை (17 மார்ச் 2024) அன்று நடத்த உள்ளது. இந்த முக்கியமான நாடு தழுவிய மதிப்பீட்டில் சுமார் 37 லட்சம் கற்போர் கலந்து கொள்கின்றனர்.

மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்படும்.  படித்தல், எழுதுதல், எண்ணறிவு ஆகிய மூன்று பாடங்களில், தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக இது நடத்தப்படுகிறது.  கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்பித்து, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தத் தேர்வு உருவாக்கப்பட்டது.

முன்னதாக, 2023-ம் ஆண்டில் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தேர்வில், 17,39,097 பேர் பங்கேற்று அவர்களில் 15,58,696 பேர் சான்றிதழ் பெற்றனர். இதுவரை மொத்தம் 36,00,870 கற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பன்மொழித் தன்மையை ஊக்குவிப்பதற்கும், தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப, பிராந்திய மொழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. பிராந்திய மொழிகளில் இந்த தேர்வை நடத்துவது மொழியியல் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும்.

இந்த முறை, சண்டிகர், புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் கோவா உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்கள் இந்த தேர்வு மூலம் 100 சதவீத எழுத்தறிவை அடையும் நிலையில் உள்ளன.  தகுதி வாய்ந்த நபர்கள், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தால் (என்ஐஓஎஸ்) வழங்கப்படும் சான்றிதழைப் பெறுவார்கள்.

17 மார்ச் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ள இந்த தேர்வு வளர்ச்சியடைந்த பாரதம், அனைவரும் எழுத்தறிவு பெற்ற பாரதம் என்ற பார்வையை நனவாக்குவதில் மற்றொரு குறிப்பிடத்தக்க நிலையை அடைய உதவும். நாடு முழுவதும் கல்வியறிவு விகிதத்தை அதிகரிப்பதில் (ULLAS – Understanding of Lifelong Learning for All in Society) உல்லாஸ் எனப்படும் அனைவருக்கும் வாழ்நாள் முழுமைக்குமான கற்றல் என்ற பொருள் படும்படியான தளம், நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply