ஆந்திர அரசு, பாலாற்றில் தடுப்பணைக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததும். அடிக்கல் நாட்டியதும் கண்டிக்கத்தக்கது!-ஜி.கே.வாசன் அறிக்கை.

ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் முயற்சியை ஏற்கனவே தடுத்து நிறுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன. தமிழக அரசின் செயலற்ற ஆட்சிக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு ஆந்திர அரசு, பாலாற்றில் தடுப்பணைக் கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததும், அடிக்கல் நாட்டியதும் கண்டிக்கத்தக்கது.

காரணம் பாலாற்றில் தடுப்பணைக் கட்டினால் பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.அதாவது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னதாகவே மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதெல்லாம் தமிழக அரசின் திறனற்ற ஆட்சியைத் தான் வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வறண்ட நிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையைக் கட்ட முயற்சி எடுத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

பாலாற்றில் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அம்சம் என்னாச்சு, இதற்கு முன்பு ஆந்திர அரசிடம் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, இப்போது தடுப்பணைக் கட்ட அடிக்கல் நாட்டியப் பிறகும், நிதி ஒதுக்கிய பிறகும் தமிழக அரசின் நிலை என்ன என பல கேள்விகளுக்கு பதில் என்னவென்றால் தமிழக அரசின் – மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.

விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்றால் விவசாயம் கிடையாது, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலித் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்காது.எனவே தமிழக அரசு, உச்சநீதிமன்ற வழக்கு, கூட்டாட்சி, விவசாயிகள், விவசாயம், குடிநீர் போன்றவற்றை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைக் கட்ட மேற்கொண்டுள்ள முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply