தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பைக் குடியரசுத்தலைவர் பார்வையிட்டார் .

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 30, 2023) கடக்வாஸ்லாவில் தேசியப்  பாதுகாப்பு அகாடமியின் 145 வது பயிற்சி நிறைவு அணிவகுப்பைப் பார்வையிட்டார். அத்துடன் 5-வது படைப்பிரிவின் கட்டிடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், சிறந்த பாதுகாப்புப் படை வீரர்களை உருவாக்கும் இடமாக தேசியப்  பாதுகாப்பு அகாடமி திகழ்கிறது என்று கூறினார். இந்த அகாடமி நாட்டின் சிறந்தப் பயிற்சி நிறுவனங்களில் ஒரு சிறப்பிடத்தைக் கொண்டுள்ளதாகவும், ஆயுதப்படைகளுக்கும், நாட்டிற்கும் ஒரு வலுவான தூணாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு அகாடமியில் வீரர்கள் பெற்ற பயிற்சி  அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எப்போதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு, பின்பற்றுவதன் மூலம் முன்னேறுமாறு வீரர்களை அவர் அறிவுறுத்தினார்.

தேசியப் பாதுகாப்பு அகாடமியின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக வீராங்கனைகள் பங்கேற்றதைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், எதிர்காலத்தில் அனைத்து வீராங்கனைகளும் நாட்டையும் தேசியப்  பாதுகாப்பு அகாடமியையும் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும், உள்நாட்டுப் பாதுகாப்பும் அவசியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ‘வசுதைவ குடும்பகம்’ என்ற பாரம்பரியத்தை நாம் பின்பற்றுவதாகவும், ஆனால், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் உணர்வுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு அந்நிய அல்லது உள்நாட்டு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது படைகள் முழு திறனுடன் தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply