இரயில் போக்குவரத்தில் இரயில்வே நிர்வாகம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!-ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

ஆந்திர மாநிலம் விஜய நகரம் அருகே நேற்று இரவு இரண்டு இரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக் கூடிய விரைவு இரயில் கண்டகப்பள்ளி இரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது பிரேக் பழுது காரணமாக நின்றது. அப்போது அதே பாதையில் பின்னால் வந்த பலாசா விரைவு இரயில், பயணிகள் இரயிலில் மோதி விபத்துக்குள்ளானது துரதிஷ்டமானது.

இரயில்வே நிர்வாகம் இரயில் போக்குவரத்தில் உரிய பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஒரு இரயிலில் ஆயிரக்கணக்கில் பயணிகள் பயணம் செய்யும் போது அவர்களின் பாதுகாப்பு முக்கியம். இரயில்வே எந்த நிமிடமும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இனிமேலும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கையை இரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும்.

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசும், இரயில்வே துறையும் உரிய இழப்பீடை அளிக்க வேண்டும். அதோடு காயம் அடைந்தவர்களுக்கு உரிய உயர்சிகிக்சையும் அவர்களுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும். காயமுற்று சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply