அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம்!-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி உத்தரவு.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த நிலையில் அமலாக்க துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை காவிரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இதனிடையே அவரது உடல் நிலையின் காரணமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணமாற்ற புகார், வேலைக்கு பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன. தற்போது அவர் அமலாக்கப்பிரிவு விசாரித்துவரும் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

அவர் மீதான பல புகார்கள் குறித்து மாநில போலீஸ் விசாரித்துவருகிறது. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்வது வழக்கு விசாரணையை பாதிக்கும். போலீஸ் விசாரணையும், சட்ட நடவடிக்கைகளையும் தடுக்கும் நோக்கில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்துவதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply