தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து காலதாமதம் இல்லாமல் நியமிக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

கிராம ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து நியமிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஊராட்சி செயலாளர்கள் அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசிற்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குகின்றார்கள். கடந்த காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களால் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்று இருந்தார்கள். கிராம ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிந்த பிறகு புதிதாக ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர், ஏற்கனவே பணியில் இருக்கும் செயலாளர்களை நீக்கிவிட்டு புதிதாக நியமிப்பார்கள். இதனால் தொடர்பணி தடைப்படுவதோடு மட்டுமல்லாமல், ஊழல் நடைபெறவும் மிகுந்த வாய்ப்புள்ளது.

இவற்றை முறைப்படுத்தும் விதமாக கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளே ஊராட்சி செயலாளர்களை நியமிக்க உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 2018-ஆம் ஆண்டு காலமுறை அடிப்படையில் ஊதியம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து கிராம ஊராட்சி தலைவர்கள் வழங்கு தொடர்ந்தார்கள்.

ஊராட்சி செயலாளர்கள் தங்கள் பணிபாதுகாப்பிற்கும், ஊதிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணவும் தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உரிய பரிசீலனை செய்து காலதாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply