விருத்தாசலம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

விருத்தாச்சலம் மற்றும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கையை திமுக அரசு தொடர்ந்து கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பொள்ளாச்சி உள்ளிட்ட பல புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பேற்ற பின் அதனை நிறைவேற்ற மறுப்பது, வாக்களித்த மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்ற பச்சைத்துரோகமாகும்.

தென்னாற்காடு மாவட்டம் கடலூர், விழுப்புரம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட 1993 ஆம் ஆண்டிலிருந்தே விருத்தாச்சலம் தனி மாவட்ட கோரிக்கையானது முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், விருத்தாச்சலம் நகராட்சியாக்கப்பட்டது முதல் ஏறத்தாழ 30 ஆண்டுகாலமாக, தனிமாவட்டம் வேண்டி அப்பகுதி மக்கள் பல்வேறு அறப்போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலமான 1866 ஆம் ஆண்டு முதலே நகராட்சியாக இருந்துவரும் கும்பகோணம், தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது மாநகராட்சியாகவே தரம் உயர்ந்துவிட்ட நிலையிலும், கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மறுப்பது மாபெரும் அநீதியாகும்.

விருத்தாச்சலம் மற்றும் கும்பகோணத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், தொடர்வண்டி நிலையங்கள், வருவாய் கோட்டங்கள் என்று மாவட்டக் கட்டமைப்பிற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய கட்டமைப்புகள் ஏதுமில்லாது, மிக மிக பின்நாட்களில் உருவான பல நகரங்கள் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படும் நிலையில், இவ்விரு நகரங்களின் தனி மாவட்டக்கோரிக்கை மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

கடலூரிலிருந்து, விருத்தாச்சலம் 60கிமீ தொலைவிலும், சிறுபாக்கம், லட்சுமணாபுரம், அரசங்குடி கிராமங்கள் 120கிமீ தொலைவிலும் அமைந்திருப்பதால், அரசு அலுவல் பணிகளுக்கும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிப்பதற்கும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அன்றாடப் பணிகளை முழுநாள் தள்ளி வைக்கவும், பணிவிடுப்பு எடுக்கவும் வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், உயர் அதிகாரிகளால் அடிக்கடி அலைக்கழிக்கப்படும்போது விவசாயிகளும், கூலித்தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதோடு, தொலைவு காரணமாக மாவட்டத்தின் கடைக்கோடி கிராமப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் மிக தாமதமாகவே சென்றடைவதால், அப்பகுதிகள் இன்றளவும் வளர்ச்சியடையாமல் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக உள்ளன.

இரண்டு, மூன்று சட்டமன்றத்தொகுதிகள் உள்ளடங்கிய பகுதிகள் கூட, மக்கள் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு இயங்கும் நிலையில், 9 சட்டமன்றத்தொகுதிகள் கொண்ட பெரிய மாவட்டங்களான தஞ்சாவூர், கடலூரைப் பிரித்து, மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தனி மாவட்டங்கள் இதுவரை அமைக்கப்படாதது ஏன்? கும்பகோணம் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளிலுள்ள ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் என அனைத்திலும் தனி மாவட்டம் அமைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அக்கோரிக்கைகளுக்கு திமுக அரசு இன்றுவரை செவி சாய்க்காதது ஏன்? கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது விருத்தாச்சலம் மற்றும் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று ஐயா ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதி என்னானது?

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் விருத்தாச்சலம், கும்பகோணம் பகுதிகளில் ஐயா ஸ்டாலின் அவர்கள் மக்களைச் சந்தித்தபோது, தனி மாவட்டம் கோரி அப்பகுதி மக்கள் அளித்த புகார் மனுக்கள் என்னானது? ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் புகார் பெட்டியில் உள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று அன்றைக்கு ஐயா ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்த நிலையில், முதலமைச்சராகி இரண்டு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது ஏன்? பெட்டியின் சாவி தொலைந்துவிட்டதா? அல்லது பெட்டியே தொலைந்துவிட்டதா? அல்லது திமுகவின் தேர்தல் நேரத்துப் பொய் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றா? என்று அடுத்தடுத்து மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

ஆகவே, திமுக அரசு இனியும் கால தாமதம் செய்து, நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றாமல், உடனடியாக விருத்தாசலம் மற்றும் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply