தமிழ்நாட்டில் குட்கா தடையாணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் குட்கா, போதைப்பாக்குகள் உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை மீண்டும் தடை செய்வதற்கு வழிவகை செய்யும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் குட்கா தடை செய்யப்பட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம். குட்காவை தடை செய்வதற்கான உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்-2006, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் ஆகியவை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நடுவண் மருத்துவத்துறை அமைச்சராக இருந்த போது தான் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. அந்த சட்டங்களின்படி தமிழ்நாட்டில் குட்காவை தடை செய்ய வேண்டும் என்று எனது தலைமையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. குட்கா தடை செய்யப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி 2011 முதல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பலமுறை கடிதங்கள் எழுதினார். அதன் பயனாகவே தமிழ்நாட்டில் 2013&ஆம் ஆண்டில் குட்கா தடை செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு குட்கா மீது விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. தமிழ்நாடு அரசும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுடன், வலிமையான வாதங்களை முன்வைத்து உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. அந்தத் தீர்ப்பை செயல்படுத்தி, குட்கா விற்பனைக்கும், நடமாட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்-2006, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் ஆகியவற்றின்படி, தமிழ்நாட்டில் குட்கா விற்பனைக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, அதற்காக மேற்கண்ட சட்டங்களின்படி குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது.

குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கின்றன. இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான். புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே ஆண்டுக்கு 3,000 டன்னுக்கும் கூடுதலாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக கடந்த கால மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இப்போதும் கூட தமிழக அரசால் ஆண்டுக்கு இருமுறை குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர ஆய்வுகளை நடத்தும் போதிலும் கூட, தமிழகத்தில் குட்கா விற்பனை தடையின்றி நடைபெறுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். அத்துடன் சட்டவிரோதமாக குட்கா விற்கப் படுவதையும் முற்றிலுமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply