உருவெடுக்கும் சவால்களை எதிர்கொள்ள நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளின் தொகுப்பை உருவாக்க என்சிஜிஜி செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் உயர்மட்ட தன்னாட்சி நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம் , புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளை  விரிவுபடுத்தி வருகிறது. நாட்டு  மக்கள், அண்டை நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் அருணாச்சல பிரதேச மாநில குடிமைப்பணி அதிகாரிகளுக்கான இரண்டு வார திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்  ஜனவரி 9 முதல் ஜனவரி 20 வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்களாதேசைச் சேர்ந்த 39 பேர், மாலத்தீவுகளைச் சேர்ந்த 26 பேர், அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 பேர் என மொத்தம்  87 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதன்முறையாக, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முசோரி மற்றும் புது தில்லி ஆகிய இரண்டு இடங்களிலும் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் பயிற்சி பெற்றனர். இது, வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலங்களில் நிர்வாக மற்றும் பொது சேவை வழங்கலை மேலும் மேம்படுத்தும் வகையில்,  நடைபெற்றது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அருகில் முதலில்’ கொள்கையின் உணர்வை நிலைநிறுத்தி, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து,  அண்டை நாடுகளின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டில் என்சிஜிஜி  உதவி செய்து வருகிறது.  மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உறுதியான பொதுச் சேவை வழங்கலுக்காக நல்ல நிர்வாகம் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தும் திறன்-வளர்ப்பு திட்டங்களை அது வடிவமைத்து செயல்படுத்துகிறது.

ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்ற ஆய்வு அமர்வில் சிபிஐ இயக்குநர் திரு எஸ் கே ஜெய்ஸ்வால் கலந்து கொண்டார்.  இந்தியாவில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்க்கமான மற்றும் பல்முனை நடவடிக்கையை அவர் விளக்கினார். ஊழலை முற்றாக வேரறுக்க, தகவல் தொழில்நுட்பத்தைப் பெருமளவில் பயன்படுத்தி, வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, அரசு எடுத்துள்ள பல தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மகத்தான வெற்றியைப் பெற்றன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார்..

 வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, என்சிஜிஜி இதுவரை 15 நாடுகளின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு  பயிற்சி அளித்துள்ளது. பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, சீஷெல்ஸ், காம்பியா, மாலத்தீவு, இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், பூட்டான், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகியவை அந்த நாடுகள். என்சிஜிஜி பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளுக்கு  அவர்களின் தேவைக்கேற்ப இடமளிக்கும் திறனை விரிவுபடுத்துகிறது.

திவாஹர்

Leave a Reply