2023 குடியரசு தின கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் 74-வது குடியரசு தினம் ஜனவரி 26, 2023 அன்று கொண்டாடப்பட உள்ளது. அப்போது கடமைப்பாதையில் ஆயுதப்படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரின் அணிவகுப்பு மாநிலங்கள் மற்றும் மத்திய  அமைச்சகங்கள்/ துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள், விமான சாகசம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

இது குறித்து  ஜனவரி-18, 2023 அன்று புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, குடியரசு தின விழா கொண்டாட்டம் சுதந்திரப்போராட்ட வீரர்  நேதாஜி சுபா சந்திர போஸின் பிறந்த தினமான  ஜனவரி 23 அன்று தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார். மகாத்மா காந்தியின் நினைவு தினமான ஜனவரி-30ம் தேதி தியாகிகள் தினத்தன்று நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள்  ராணுவ வீரர்கள், மக்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு குடியரசுத்தின விழா கொண்டாட்டத்தில் பல்வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ராணுவ  டாட்டு மற்றும் பழங்குடியினர் நடனம், வீரக்கதைகள் 2.0, வந்தே பாரதம் நடனப்போட்டியின் இரண்டாவது பிரிவு, தேசிய போர் நினைவிடத்தில் ராணுவ நிகழ்ச்சிகள் மற்றும் கடலோர காவல்படையின் இசை நிகழ்ச்சி, அகில இந்திய அளவிலான பள்ளி இசை நிகழ்ச்சி போட்டி, ட்ரோன் காட்சி உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எஸ்‌. சதிஷ் சர்மா

Leave a Reply