நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் என்பது வளர்ந்த இந்தியாவின் முக்கிய அம்சமாகத் திகழும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், வளர்ந்த இந்தியாவின் முக்கிய அம்சமாக நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் திகழும் என்றும், அனைத்து முயற்சிகளிலும் நுகர்வோரை மையமாகக் கொண்ட செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நுகர்வோர் நலனுக்காக நுகர்வோர் விவகாரங்கள் துறை பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதற்காகவும், சிறந்த சாதனைகளுக்காகவும் இத்துறையை அமைச்சர் பாராட்டினார். நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்கள், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் முயற்சிகளுக்காக அவற்றையும் அவர் பாராட்டினார். புகார்களுக்காக உதவி எண்களை அணுகுபவர்கள் பெரும்பாலும் சிறிய நிறுவனங்களில் இருந்து வருபவர்கள் என்றும், அவர்கள் தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் என்றும், பிற இடங்களில் உதவி பெற முடியாதவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். எனவே, பல்வேறு செயல்முறைகளில் கவனம் செலுத்துவதற்கும், சரியான நேரத்தில் நீதியை வழங்குவதற்கும் அவர்களுக்கு உதவ மிகவும் திறம்பட்ட அணுகுமுறையுடன் கூடுதல் முயற்சியை மேற்கொள்வது நம் அனைவரது கடமையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்றைய கருப்பொருள், “நுகர்வோர் ஆணையங்களில் உள்ள வழக்குகளைத் திறம்படத் தீர்ப்பது” என்று குறிப்பிட்ட அமைச்சர், புகார் அளித்த நுகர்வோருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் விரைவான நீதியை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட அரசின் அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், வணிகத்துறையினர் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் ஆகிய இரண்டையும் எளிதாக்க அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

நுகர்வோர் விவகாரத் துறையின் முன்முயற்சிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட மூன்று முக்கியமான கருப்பொருள்களைப் பிரதிபலிப்பதாக திரு. பியூஷ் கோயல் எடுத்துரைத்தார். “ஒன்றுபடுதல், திறன் மேம்பாடு மற்றும் பருவநிலை மாற்றம்” ஆகிய மூன்று அவை என அவர் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்கும், வணிகத் துறையினருக்கும், சாமானிய மக்கள் நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அமைச்சர் பேசினார். கடந்த சில ஆண்டுகளில், 1500-க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன எனவும் சுமார் 39,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பல சிறிய செயல்பாடுகள் குற்றமற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply