ஒரே தேசம் –ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பெருமளவில் பலனடைந்துள்ளனர்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

ஒரே தேசம்- ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏழை மக்கள் பலனடைந்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண அன்ன யோஜனா எனப்படும் ஏழைகள் நலவாழ்வுத் திட்டம் மூலம் மத்திய அரசு ஏழைகளுக்கு ரூ.3.90 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்களை இலவசமாக வழங்கியிருப்பதாக கூறினார்.

வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் சாதனைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பாதிக்கபட்டிருந்த நிலையில், திரு நரேந்திர மோடி தலைமையான அரசு ரேஷன் கடைகள் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களில், தனி நபருக்கு  மாதத்திற்கு 5 கிலோ  அரிசி அல்லது கோதுமையை இலவசமாக வழங்கியதை சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே தேசம்-ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விரிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு  உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

2022-23ம் ஆண்டின் கரீப் சந்தை பருவத்தில் டிசம்பர் 4ம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து 339.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், 30 லட்சம் விவசாயிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் 2021-22ம் ஆண்டில் சாதனை அளவாக நெல் கொள்முதலுக்கு ரூ. 2.75 லட்சம் கோடியை  விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கி மத்திய அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக இருப்பதை உறுதி செய்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply