மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ரூ.2450 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.2450 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முன்னதாக,  ஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு அதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

இன்று தொடங்கப்பட்ட பல திட்டங்களில் 320 நிறைவடைந்த, 890 கட்டுமானத்தில் உள்ள 4ஜி மொபைல் கோபுரங்கள், உம்சவ்லியில் ஐஐஎம் ஷில்லாங்கின் புதிய வளாகம், ஷில்லாங் – டீங்பாசோ சாலை, புதிய ஷில்லாங் துணைநகரம் உள்ளிட்ட  திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், காளான் மேம்பாட்டு மையத்தில் ஸ்பான் ஆய்வகம், மேகாலயாவில் ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையம், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அஸ்ஸாமில் 21 இந்தி நூலகங்களையும் பிரதமர் திறந்து வைத்தார். அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆறு சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். துரா மற்றும் ஷில்லாங் டெக்னாலஜி பார்க் கட்டம் -II இல் ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் மாநாட்டு மையத்தின் அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேகாலயா இயற்கை மற்றும் கலாச்சாரத்தில் செழிப்பான மாநிலம் என்றும், மக்களின் அரவணைப்பு,  வரவேற்கும் இயல்பு மூலம் இந்த செழுமை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மேகாலயா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்களுக்காக அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் வேளையில், இன்றைய இந்த விழா கால்பந்து மைதானத்தில் நடைபெறுவது தற்செயலான நிகழ்வாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  “ஒருபுறம், கால்பந்து போட்டி நடக்கிறது, அதே நேரத்தில் நாங்கள் கால்பந்து துறையில் வளர்ச்சிக்கான போட்டியை வழிநடத்துகிறோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்தாலும், இங்குள்ள மக்களின் உற்சாகம் குறையவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். கால்பந்தாட்டத்தில் காட்டப்படும் சிவப்பு அட்டை பற்றி குறிப்பிட்ட பிரதமர், வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு இடையூறாக வரும் அனைத்துத் தடைகளுக்கும் அரசு சிவப்பு அட்டை காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். “ஊழல், பாரபட்சம், உறவுமுறை, வன்முறை அல்லது வாக்கு வங்கி அரசியல் ஆகியவை பிராந்தியத்தின் வளர்ச்சியை சீர்குலைக்கும், இந்த தீமைகளை அகற்ற அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாறான தீமைகள் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், அவை ஒவ்வொன்றையும் இல்லாமல் ஒழிக்கும் நோக்கில் நாம் செயற்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசின் முயற்சிகள் சாதகமான பலனைக் காட்டுவதாக அவர்  கூறினார்.

விளையாட்டு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்கிய பிரதமர், மத்திய அரசு புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருவதாகவும், அதன் பலன்களை வடகிழக்கு பகுதிகளிலும் தெளிவாகக் காணலாம் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தைத் தவிர, வடகிழக்கு மண்டலம் பல்நோக்கு அரங்கம், கால்பந்து மைதானம் மற்றும் தடகளப் பாதை போன்ற பல உள்கட்டமைப்புகளுடன் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது போன்ற தொண்ணூறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் சர்வதேச அணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இளைஞர்களின் சக்தியை உறுதியாக நம்புவதாகவும், இதுபோன்ற முக்கியமான போட்டியை இந்தியா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் உறுதியளித்தார். மேலும் ஒவ்வொரு இந்தியரும் அதில் பங்கேற்கும் நமது அணியை அப்போது உற்சாகப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

“வளர்ச்சி என்பது பட்ஜெட், டெண்டர்கள், அடிக்கல் நாட்டுதல், திறப்பு விழாக்கள் ஆகியவற்றுடன் நின்றுவிடுவதில்லை” என்று கூறிய பிரதமர்,  2014 க்கு முன்பு இது வழக்கமாக இருந்தது என்றார். “இன்று நாம் காணும் மாற்றம் நமது நோக்கங்கள், தீர்மானங்கள், முன்னுரிமைகள் மற்றும் நமது பணி கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும்” என்று கூறிய அவர், “நவீன உள்கட்டமைப்பு, நவீன இணைப்புடன் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே கொள்கை . அனைவரின் முயற்சிகள் மூலம் விரைவான வளர்ச்சியின் நோக்கத்துடன் இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் பிரிவையும் இணைப்பதே இதன் நோக்கம். பற்றாக்குறையை நீக்குதல், தூரங்களைக் குறைத்தல், திறன் மேம்பாட்டில் ஈடுபடுதல், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவை நமது முன்னுரிமை. மேலும் பணி கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், ஒவ்வொரு திட்டமும்,  குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படுவதைக் குறிக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்த நிலையில், இந்த ஆண்டு உள்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.7 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது என்று பிரதமர் தெரிவித்தார். உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விஷயத்தில் மாநிலங்கள் தங்களுக்குள் போட்டி போடுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply