செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானது என்பது செய்தி தொடர்பாளர்களின் மனதில் முதன்மை கொள்கையாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

உண்மையான தகவல்களை வழங்குவது ஊடகங்களின் முதன்மைப் பொறுப்பு என்றும், தகவல்கள் பொது களத்தில் வைக்கப்படுவதற்கு முன்பு உண்மைகளை சரியாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு யூனியன் பொதுச் சபை 2022-ன் தொடக்க விழாவில் இன்று பங்கேற்றுப் பேசிய அமைச்சர், மக்களுக்கு தகவல் சொல்லப்படுவதன் வேகம் முக்கியமானது என்பதும் துல்லியம் அதைவிட முக்கியமானது என்பதும் செய்தியாளர்களின் மனதில் முதன்மையாக இருக்க வேண்டும் என்றார். சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரவலாகியுள்ள நிலையில் அவற்றில் போலி செய்திகளும் பெருகிவிட்டன என்று அமைச்சர் மேலும் கூறினார். இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை தடுப்பதற்கும் மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்கும் இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகத்தில் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொறுப்பான ஊடக நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையைப் பேணுவதை மிக உயர்ந்த வழிகாட்டும் கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். பொது ஒலிபரப்பு சேவை நிறுவனங்களான தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பதற்காகவும், உண்மையான செய்திகளை வழங்குவதற்காக அவை மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். தேசிய பேரிடர்களின் போது பேரிடர் மேலாண்மையில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். உயிர்களைக் காப்பாற்றுவதில் நேரடியாகப் பணிபுரிவதால், நெருக்கடிக் காலங்களின் போது ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்19 தொற்றுநோய்க் காலத்தின்போது வீடுகளில் முடங்கித் தவித்த மக்களுக்கு ஊடகங்கள் உதவிகரமாக இருந்ததாக கூறிய திரு அனுராக் தாக்கூர், மக்களை வெளி உலகத்துடன் ஊடகங்கள் இணைத்ததாகக் கூறினார். குறிப்பாக தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் பொதுவாக இந்திய ஊடகங்களும் செய்த சிறந்த பணிகளை அவர் இந்த மாநாட்டின்போது எடுத்துரைத்தார்.  தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி, தங்கள் பொது சேவைப் பணியை மிகவும் திருப்திகரமாக வழங்கியதாகவும் பெருந்தொற்றுக் காலத்தின் போது அவை மக்களுடன் உறுதியாக நின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  பொதுவாக கொவிட்-19 விழிப்புணர்வுத் தகவல்கள், முக்கியமான அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களுடனான இலவச ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி அவை நாட்டின் மூலை முடுக்கிலுள்ள அனைவரையும் சென்றடைவதை இந்திய ஊடகங்கள் உறுதி செய்ததாக அவர் கூறினார். பிரசார் பாரதி, கொவிட் 19 காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை இழந்தபோதிலும் அது தனது பொது சேவையைத் தொடர்ந்து தடையின்றி மேற்கொண்டது என அமைச்சர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply