“ஆஸ்த்ரா ஹிந்த் 22” கூட்டு ராணுவப் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா வருகை.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே “ஆஸ்த்ரா ஹிந்த் 22” என்ற கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (நவம்பர் 28, 2022) முதல் டிசம்பர் 11 வரை நடைபெற உள்ளது. இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் கலந்து கொள்ளும் முதல் பயிற்சி, இது.

ஆஸ்திரேலிய இராணுவத்தின் 2-வது பிரிவின் 13-வது படையைச் சேர்ந்த வீரர்கள் குழுவினர் பயிற்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் டோக்ரா படை, இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது. ஆஸ்த்ரா ஹிந்த் பயிற்சி, வருடந்தோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

நேர்மறையான ராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை இரு ராணுவங்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டு பயிற்சி வழங்கும். இரு ராணுவங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் இயங்கு தன்மையை இந்த பயிற்சி ஊக்குவிப்பதோடு, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.

திவாஹர்

Leave a Reply