சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023, சிறுதானியங்கள் ஊட்டச்சத்து தானியங்கள் என்பதை உலக அளவில் பறைசாற்ற கிடைத்துள்ள வாய்ப்பு !-மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

2023-ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்திருப்பது, உணவு சந்தையில் சிறுதானிய  உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனை பதப்படுத்துவதற்கும், சுழற்சி முறை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் மற்றும் வெளியுறவு அமைச்சகம் சார்பில்  சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023 கொண்டாடங்களின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா சபை அறிவித்திருப்பதாகவும், உலக நாடுகளில் சிறுதானிய பயன்பாட்டை அதிகரிப்பதே இந்தியாவின் நோக்கம் என்றும் கூறினார். 

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியங்களில் இடம்பெற்றுள்ள ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், 14 மாநிலங்களின் 212 மாவட்டங்களில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெயசங்கர், கொரோனா பெருந்தொற்று, பருவ நிலை மாறுபாடு, போர் பதற்றம் உள்ளிட்டவை சிறுதானியங்களின் தேவையை உலக நாடுகளில் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். சர்வதேச நாடுகளின் உறவுகளை விட, உணவு பாதுகாப்பை பொருத்தவரை சிறுதானிங்கள் இன்றியமையாதவை என்று குறிப்பிட்ட அவர், கொரோனா பெருந்தொற்று காலம் உலக நாடுகளுக்கு உணவு பாதுகாப்பின் முக்கியத்துவை உணர்த்திருப்பதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி, செயலாளர் தாமு ரவி, வேளாண் துறை செயலாளர் மனோஜ் அஹூஜா, இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திவாஹர்

Leave a Reply