ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்தை செயல்படுத்தி தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் லால் பகதூர் சாஸ்திரி!-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்தை செயல்படுத்தி தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் லால் பகதூர் சாஸ்திரி என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். 

தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

லால் பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு நிகழ்வு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கக்கூடிய தருணம் என்று கூறிய அவர், சிலையை நிறுவியதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மத்திய பொதுப்பணித்துறைக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். சாஸ்திரியின் எளிமை, தேச வளர்ச்சிக்கான பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று கூறினார். புகழ்பெற்ற ’ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ முழக்கத்தின் வரலாறு நமக்கு தெரியாது என்று கூறினார்.

மேலும், நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்திய பாதுகாப்புத் துறையின் தேவை கருத்தில் கொள்ளப்படாததால் ஜம்மு & காஷ்மீரின் பெரும் பகுதி உள்பட ஒவ்வொரு பிரதேசங்களாக நாம் எதிரிகளிடம் இழந்தோம் என்றும், ஆக்கிரமிப்பு & ஊடுருவல் ஆகியவை அதிகரித்து தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது என்றும் பேசினார். இதேபோல கடும் வறட்சி ஏற்பட்டு, உணவுப் பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. ஊடுருவலால் நாட்டின் எல்லையிலும், மக்களுக்கு உணவளிக்க முடியாமல் நாட்டிற்குள்ளேயும் நாடு பெரும் அவமானத்தை சந்தித்தது என்று தெரிவித்த ஆளுநர், லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்ற பிறகு, பிரதேசங்களின் ஒருமைப்பாடு என்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி ’ஜெய் ஜவான்’ என்று முழங்கி ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும்,  1965 ஆம் ஆண்டு போர் வெற்றிக்கு பிறகு நமது நாட்டின் வலிமையை அனைவரும் உணர்ந்ததாகவும், தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த பசுமை இயக்கம் மூலம், நாட்டில் மக்கள்தொகை உயர்ந்து வந்த போதிலும் நமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ததோடு, உலகிற்கே உணவை வழங்கி வருகிறோம் என்று ஆளுநர் குறிப்பிட்டார். உலகின் எந்த மூலையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், இந்தியா தானாக முன்வந்து உணவை வழங்கி வருகிறது என்று ஆளுநர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியவர் லால் பகதூர் சாஸ்திரி. தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் துறைமுகத்தை முக்கியத் துறைமுகமாக மாற்றிய பங்கு லால் பகதூர் சாஸ்திரிக்கு உண்டு எனவும், இவ்வாறு தேசத்திற்கான இவரது பங்களிப்பை நம்மால் மறுக்க முடியாது, மறைக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், தான் பதவியேற்றபோது தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் விவரம் 40 ஆக இருந்தது தற்போது இது 1500 ஆக உள்ளது என்றார். மேலும், சுதந்திரப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் இருந்து பலர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இந்த வீரர்களின் தியாகத்தை எப்போதும் தேசம் மறவாது என்றார். மேலும், லால் பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நமக்கு அளித்துள்ள பாதையில் கடமையாற்றி 100 வது சுதந்திர தினத்தில் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply