சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் சென்றடைய வேண்டும்: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கோவையில் பேச்சு.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் அபிலாக்ஷ் லிக்கி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துல்லிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை குறித்த தேசிய குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பண்ணை மேம்பாட்டு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். தேசிய விவசாயிகள் நல திட்டத்தின் கீழ் (RKVY-RAFTAAR) செயல்படும் வேளாண் வர்த்தக வழிகாட்டு மையமான R-ABI என்ற புத்தொழில் நிறுவனத்தையும்  ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

விவசாயிகள், தேனீ வளர்ப்பாளர்கள், வேளாண் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய டாக்டர் லிக்கி, வேளாண் தொழில்நுட்பம் மற்றும் அது சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகள் சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளை அதிக அளவில் சென்றடைவதற்குத் தேவையான முன்முயற்சிகளை பங்குதாரர்கள் அனைவரும் விரிவாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விவசாயிகள் மற்றும் பயனாளிகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக உற்பத்தியை அதிகரிப்பது, உயர்தரம் வாய்ந்த வேளாண்மை மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற துல்லிய பண்ணை குறித்த தொழில்நுட்பங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக நாடு முழுவதும் விவசாயத்திற்கு உகந்த காலநிலை உள்ள மண்டலங்களில் 22 துல்லிய பண்ணை மேம்பாட்டு மையங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது. தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, மேற்கு வங்கம், லடாக், உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஜார்கண்ட், பிகார், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள மத்திய/ மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இந்த மையங்கள் அமைந்துள்ளன.

சொட்டுநீர் பாசனம், நெகிழி தழைக்கூளம், பசுமை குடில், தெளிப்பு நீர் பாசனம் போன்ற முக்கிய துறைகளிலும், அது சம்பந்தமான தொழில்நுட்பங்களிலும் கோயம்புத்தூரில் உள்ள துல்லிய பண்ணை மேம்பாட்டு மையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

வேளாண் வர்த்தக வழிகாட்டு மையம், வேளாண் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஐந்து தலை சிறந்த மையங்களையும், கோயம்பத்தூர் உள்ளிட்ட பகுதிளில் 24 வேளாண் வர்த்தக வழிகாட்டு மையங்களையும் நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply