மத்திய அமைச்சர் தலைமையில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை குறித்த மாநாடு .

தேசிய எஸ்.சி-எஸ்.டி மையத்தின் கீழ் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் நவம்பர் 18 அன்று புதுதில்லியில் நடத்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாட்டிற்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தலைமை வகித்தார். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணையின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி தெரிந்து கொண்டு, அந்த நிறுவனங்களுடன் கலந்தரையாடும் நோக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்பட்டது.

குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கையின்படி ஒவ்வொரு மத்திய அரசின் அமைச்சகம், துறைகள் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தங்களது வருடாந்திர பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைந்தபட்சம் 25%ஐ குறு மற்றும் சிறு நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் 4% கொள்முதல் பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி தொழில்முனைவோரால் நடத்தப்படும் குறு மற்றும் சிறிய நிறுவனங்களில் இருந்தும், 3%, பெண் தொழில்முனைவோரிடமிருந்தும் வாங்கப்பட வேண்டும்.

பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி மற்றும் மகளிர் குறு மற்றும் சிறு நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்யும் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பொதுத்துறை நிறுவனங்களை அங்கீகரித்து, பாராட்டுவதிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.

இந்தக் கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை நோக்கி மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டிய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி/ பெண் தொழில்முனைவோருக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.

திவாஹர்

Leave a Reply