தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதுடன் மீனவர்களையும் , விசைப்படகையும் உடனடியாக மீட்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர் . அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்தபோது மீனவர்கள் பயந்த நிலையில் அங்கிருந்த தப்பித்தனர் . அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்து படகையும் , அதிலிருந்த 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர் . இது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் ஒட்டு மொத்த தமிழக மீனவக் குடும்பங்களும் கவலை அடைந்துள்ளனர் .

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் , சிறைப்பிடித்தல் , படகுகளை பறிமுதல் செய்தல் இன்னும் நீடிக்கிறது . இது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் . இந்நிலை இனியும் நீடிக்கக் கூடாது என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும் .

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க முக்கிய கவனம் செலுத்தி , பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் .

மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும் , விசைப்படகையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் .

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply