இந்தியாவைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களை நைஜீரியாவில் இருந்து உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

கச்சா எண்ணெயைத் திருட முயன்றதாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக , MT Heroic Idun என்ற எண்ணெய்க் கப்பலின் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 16 இந்திய பணியாளர்கள் நைஜீரியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து நான் வேதனை அடைகிறேன் .

நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் , கப்பல் எக்குவடோரியல் கினியாவில் இருந்தபோதே கப்பலை விடுவித்து , பணியாளர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு கோரியிருந்தும் கப்பல் நைஜீரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .

கப்பல் பணியாளர்களின் குடும்பங்கள் பணியாளர்களை விரைவாக திருப்பி அனுப்பவும் , குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைக்கவும் மத்திய அரசு அதிகாரிகளை அணுகியுள்ளனர் . பணியாளர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்றும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அந்த செய்தி அறிக்கை கூறுகிறது . இது குடும்பத்தாரின் கவலையையும் , மனவேதனையையும் அதிகரிக்கிறது .

எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பணியாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு மனநிம்மதி அளிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply