இந்திய ராணுவம் புதிய வடிவமைப்பு மற்றும் உருமறைப்பு முறை சீருடைக்கான ‘அறிவுசார் சொத்துரிமையை (IPR)’ பதிவு செய்துள்ளது.

புதிய உருமறைப்பு முறை (Camouflage Pattern) மற்றும் மேம்படுத்தப்பட்ட ராணு சீருடையின் வடிவமைப்பை உரிமையை நிலைநாட்டுவதற்காக, அதை பதிவு செய்வதற்கான நடைமுறையை

ராணுவம் மேற்கொண்டுள்ளது.  கொல்கத்தாவில் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வணிக முத்திரைத் தலைமைக் கட்டுப்பாட்டாளர் மூலமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

21 அக்டோபர் 2022 தேதியிட்ட 42/2022 எண் கொண்ட வெளியீட்டில் காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இதழில் இது வெளியிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கான புதிய டிஜிட்டல் முறை சீருடை, 15 ஜனவரி 2022 அன்று (இராணுவ தினத்தில்) வெளியிடப்பட்டது. மேம்படுத்தப்பட்ட இந்தச் சீருடையில் தற்காலத்துக்கு ஏற்ற தோற்றம் மற்றும் செயல்பாட்டு வடிவமைப்புகள் அதிக அளவில் உள்ளன. இலகுவாகவும், அதே சமயம் வலிமையாகவும், காற்றோட்டமானதாகவும், விரைவாக உலர்த்தப்படக்கூடியதாகவும், பராமரிக்க எளிதாகவும் இந்தச் சீருடை உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான சீருடையில் பாலினம் தொடர்பான மாற்றங்கள் மேற்கொள்ளப்ட்டதன் மூலம் இந்தச் சீருடை தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.  வடிவமைப்பு மற்றும் உருமறைப்பு வடிவமைப்பின் (Camouflage Pattern) பிரத்யேகமான ‘அறிவுசார் சொத்துரிமை (IPR)’ தற்போது இந்திய ராணுவத்திடம் மட்டுமே உள்ளது. எனவே அங்கீகரிக்கப்படாத எந்தவொரு விற்பனையாளரும் இதைத் தயாரித்து விற்பது சட்டவிரோதமானதாகும். அவ்வாறு செய்தால் சட்டரீதியான நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இந்திய ராணுவம் இந்த வடிவமைப்பிற்கான பிரத்யேக உரிமைகளைக் கொண்டுள்ளதால் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் மூலம் சிவில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்.

புதிய சீருடை அறிமுகப்படுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக, மொத்தம் 50,000 செட் சீருடைகள் ஏற்கனவே கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட் (சிஎஸ்டி) மூலம் வாங்கப்பட்டு 15 சிஎஸ்டி கிடங்குகளுக்கு (தில்லி, லே, பிடி பாரி, ஸ்ரீநகர், உதம்பூர், அந்தமான் & நிக்கோபார், ஜபல்பூர், மசிம்பூர், நரங்கி, திமாபூர், பாக்டோக்ரா, லக்னோ, அம்பாலா, மும்பை மற்றும் காட்கி) வழங்கப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியைச் சேர்ந்த (என்ஐஎஃப்டி) பயிற்சியாளர்களுடன் ஒருங்கிணைந்து, குறிப்பிட்ட வடிவமைப்பின்படி புதிய சீருடைகளை தைப்பதில் சிவில் மற்றும் ராணுவ தையல்காரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூனியர் கமாண்டிங் அலுவலர்கள் (ஜேசிஓ) மற்றும் இதர தகுதி உடைய அலுவலர்களுக்கு வழங்குவதற்காக 11.70 லட்சம் சீருடைகளை மொத்தமாக கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது. 2023 ஆகஸ்ட் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply