மத்திய அமைச்சர் முருகனின் கோரிக்கைக்கு ஏற்ப, பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல்.

மத்திய அமைச்சர் முருகனின் கோரிக்கைக்கு ஏற்ப பயணிகளின் வசதிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் இரண்டு அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ரயில் நிலையத்தில் 2 எஸ்கலேட்டர்கள் அமைக்க வலியுறுத்தி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கடந்த 1-ஆம் தேதி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினார்.

அதில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் யாத்ரிகர்கள் வருகை புரிகின்றனர். மயிலாடுதுறையை சுற்றி கும்பகோணம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. குறிப்பாக மாயுராணந்த சுவாமி கோவில், ஸ்ரீ வாதனேஷ்வர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம், சூரியனார் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், ஆலங்குடி போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரிகர்கள், பயணிகள் நாள்தோறும் ரயில்கள் மூலம் மயிலாடுதுறை வழியாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 

குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பலர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடைகள் இரண்டு அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் அமைச்சர் முருகன் வலியுறுத்தியிருந்தார். 

அந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ண்வ், தங்கள் கோரிக்கை அடங்கிய கடிதம் கிடைக்கப்பெற்றது என்றும் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விரைவில் 2 எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படவுள்ளன.

திவாஹர்

Leave a Reply