மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்களின் மாநாடு உதய்பூரில் நடைபெற்றது.

மாநில/ யூனியன் பிரதேசங்களின் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்களின் மாநாடு அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்றது. மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை  அமைச்சர் திரு ஆர்.கே சிங் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மின்துறை இணை அமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் போது, முதலீட்டுத் தேவை மற்றும் மின் துறை சீர்திருத்தங்கள் உட்பட 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, நிதி நிலைத்தன்மை மற்றும் விநியோகத் துறையின் நிலைத்தன்மை, மின் அமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. மாநிலங்கள் ஒவ்வொரு தொடர்புடைய பிரச்சினைகளிலும் தங்கள் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கின.

மாநில அரசுகளின் மானியம், நிலுவைத் தொகைகள், உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்தல்  மற்றும் மின்சாரம் (தாமதமாக செலுத்தும் கூடுதல் கட்டணம் மற்றும் தொடர்புடைய விஷயங்கள்) சம்பந்தப்பட்ட விதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இழப்புகளைக் குறைப்பதற்காக, நுகர்வோருக்கான ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான கணினி அளவீட்டை விரைவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பல்வேறு வகை நுகர்வோருக்கு உண்மையான மின்சார நுகர்வுக்கு யூனிட் அடிப்படையில் மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக மின்சார அமைப்புகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மாநிலங்கள், தங்கள் விநியோக நிறுவனங்களின் (டிஸ்காம்கள்) நிதி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் கீழ், தங்களின் செயல் திட்டத்தை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன.

அனைத்து முயற்சிகளும் கொள்கைகளும் மின்சார நுகர்வோருக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கும், 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற நிறுவு திறனை எட்டுவதற்கும், பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதில் நாட்டின் உறுதிப்பாட்டின் படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வரிசைப்படுத்தல் மையமாக உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கடந்த சில ஆண்டுகளில் அடைந்த சாதனைகளை எடுத்துரைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான கொள்கை, ஒழுங்குமுறை மற்றும் நிறுவனத் தலையீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  துறையில் உள்நாட்டு உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

40 ஜிகாவாட் என்ற ஒட்டுமொத்த இலக்கை எட்டுவதை உறுதி செய்வதற்காக, சோலார் கூரை அமைப்புகளை விரைவாக வரிசைப்படுத்த மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மின்துறைக்கு முன் வைக்கப்பட்டுள்ள லட்சிய இலக்குகளை அடைவதில் மாநிலங்களின் ஒத்துழைப்பை மத்திய அமைச்சர் கோரினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply