அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் மத்திய அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார் .

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று ஸ்ரீமந்த் சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் இருந்து, காணொலி மூலம் அசாம் அரசு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் ரயில்வே அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். குவஹாத்தியில் இருந்து லும்டிங் கனவாய், நாகாலாந்தின் சொக்வி, மேகாலயாவின் மண்டிபத்தர் வரை இயங்கும் ரயிலை கொடியசைத்து அவர் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இன்று ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை நிர்மாணம், பெட்ரோலியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்கள் வெற்றியடைய வாழ்த்தினார். இந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் வணிகம், வேலை வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை அதிகரிக்கும் என்றும் பொருளாதாரம் வலுப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த உள்கட்டமைப்புதான் அடிப்படை என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை’யின்  மையப் புள்ளியாக வடகிழக்கு பகுதி உள்ளது என்றும், இந்தப் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு, சாலை மற்றும் தகவல் தொடர்பு இணைப்பில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அசாமின் வளர்ச்சி முழு வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

வடக்கு கிழக்கு பிராந்தியமானது இயற்கை வளங்கள் நிறைந்த பிரதேசமாக காணப்படுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் அசாம் 13 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் 15 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து வருகிறது. மொய்னார்பந்தில் இன்று திறக்கப்பட்ட அதிநவீன டிப்போ, முழு பராக் பள்ளத்தாக்கு மற்றும் திரிபுரா, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவற்றின் பெட்ரோலியப் பொருட்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் சாலை மற்றும் ரயில் இணைப்பில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், இது  இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் துறை வளர்ச்சியும் நாகரீக சமுதாயத்தின் அடையாளம் என்று கூறிய குடியரசுத் தலைவர், அசாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு சேவைகளை மேலும் வலுப்படுத்த, 3000 மாதிரி அங்கன்வாடி மையங்கள் இன்று தொடங்கப்பட்டது பாராட்டுக்குரிய முயற்சியாகும் என்றார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்துடன் 100 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply