உத்தராகண்டில் ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய-திபெத் எல்லைக்காவல் படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் விஜயதசமி கொண்டாடினார்.

உத்தராகண்டின் அவுலியில் ராணுவ வீரர்கள் மற்றும் இந்திய- திபெத் எல்லைக் காவல்  படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் இன்று விஜயதசமி கொண்டாடினார். தமது பயணத்தின் போது ஆயுத பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் பங்களிப்பைப் பாராட்டினார்.

 ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய திரு ராஜ் நாத் சிங்  சீருடைப் பணியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுடன் கலந்துரையாடுவது எப்போதுமே ஊக்கமளிக்கும் சக்தியாக இருக்கிறது என்றார்.  நமது ராணுவ வீரர்களின் திறமைகளில் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய அவர்,  நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்களிப்பை பாராட்டினார்.  வெளியே இருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து  தேசத்தைப்  பாதுகாப்பதில் நமது படைகளின் பங்களிப்பை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். பாதுகாப்பான சூழ்நிலையால் பொருளாதார வளர்ச்சியை இந்தியா தொடர முடிகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை அடைய முடிகிறது என்றும் அவர் கூறினார்.

 கல்வான் சம்பவத்தில் நமது ராணுவ வீரர்களின் இணையற்ற துணிச்சலையும் தைரியத்தையும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.  கொள்கை அடிப்படையில் உலகம் ஒரு குடும்பம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொள்கிறது ஆனால் வெளியே இருந்து தீங்கிழைக்கப்பட்டால்  அதற்கு தக்க பதிலடி கொடுக்கிறது என்றும் அவர் கூறினார்.  இத்தகைய துணிச்சல் காரணமாகவே இந்தியாவின் வளர்ச்சியை  உலகம் அங்கீகரிக்கிறது என்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துப்  பிரச்சனைகளிலும் முக்கிய முடிவெடுப்பதில்  ஒன்றாக இந்தியா உருவாகி உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். சர்வதேச அரங்கில் மதிப்புடன் இந்தியாவின் கருத்து கவனிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

 ஆயுத பூஜையின் முக்கியத்துவம் பற்றி பேசிய திரு ராஜ் நாத் சிங் அனைத்து விஷயங்களிலும்  ஒற்றுமையை வலியுறுத்தும்  இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவங்களை எடுத்துரைத்தார். நமது வாழ்க்கைக்கு துணையாக இருக்கும்  அனைத்தையும்,  உயிர்வாழ்வன மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட

உயிர் வாழாதன  ஆகியவற்றின் பங்களிப்பை நமக்கு அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.  இவைதான் நம்மைக் காப்பதற்கு உதவி செய்கின்றன என்று அவர் கூறினார்.

விஜயதசமியை  ஆர்வத்துடன் கொண்டாடிய ராணுவ வீரர்களுடன் பின்னர் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர் அந்த விழாவிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது தேச பக்தி பாடல்களையும் ராணுவ வீரர்கள் பாடினர். ராணுவத்  தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply