தூய்மைமிக்க நகரங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்குகிறார்.

ஆண்டின் மிகப்பெரிய நகர்புற தூய்மை விழாவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விடுதலையின் 75 ஆண்டு தூய்மை அளவீட்டு நிகழ்ச்சியில் தூய்மையான மாநிலங்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். இதற்கான விழாவுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் புதுதில்லி தல்கதோரா மைதானத்தில் அக்டோபர் 1-ந் தேதி ஏற்பாடு செய்துள்ளது. குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0-வின் முதலாம் ஆண்டு நிறைவை இந்த நாள் குறிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, அத்துறையின் இணையமைச்சர் திரு கௌசல் கிஷோர், மாநிலங்களின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்கள், நாடு முழுவதிலும் இருந்து மாநகராட்சி மேயர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் 160க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாநிலங்கள் மற்றும் நகரங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1800 விருந்தினர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

2016-ம் ஆண்டு 73 பெரிய நகரங்கள் அளவீடு செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு 434 நகரங்கள் அளவீடு செய்யப்பட்டது. இதுவரை நடைபெற்ற அளவீட்டில் 4355 நகரங்கள் சேர்ந்துள்ளன.

தூய்மை அமிர்தப்பெருவிழாவின் ஒருபகுதியாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் 8-வது ஆண்டை இந்தியா கொண்டாடும் நிலையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செப்டம்பர் 17-ந் தேதி துவங்கிய இந்த விழா, இருவார காலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த இயக்கம் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் சென்றடைந்துள்ளது. நகர்ப்புறங்களில் தூய்மை பராமரிப்பை இந்த இயக்கம் உறுதி செய்துள்ளது. இல்லங்கள் தோறும் சென்று குப்பைகளை சேகரிப்பதுடன், அவற்றை பிரித்து திடக்கழிவு மேலாண்மையை மேற்கொண்டு வருகிறது. இந்த பணியில் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திவாஹர்

Leave a Reply