அரசின் திட்டங்களை மக்களிடையே உடனுக்குடன் எடுத்துச் செல்வது அவசியம்! – மா அண்ணாதுரை வலியுறுத்தல்.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களை மக்களிடையே உடனுக்குடன் எடுத்துச் செல்வது அவசியம் என மத்திய தகவல் தொடர்பகம் மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.

தொழில்நுட்பங்கள் மாறிவரும் இன்றைய சூழலில் “சமூக ஊடகங்களை கையாள்வது” குறித்த ஒரு நாள் பயிலரங்கு சென்னையில் இன்று நடைபெற்றது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தகவல் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை தொலைக்காட்சி செய்திப்பிரிவு இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பயிலரங்கிற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை தென் மண்டல தலைமை இயக்குநர் எஸ்.வெங்கடேஷ்வர் தலைமை தாங்கினார். இதில் மத்திய தகவல் தொடர்பகத்தின் கள அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள், மாவட்ட பகுதிநேர செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கை தொடக்கி வைத்துப் பேசிய கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் கீழ் வானொலி, தொலைக்காட்சி, கள விளம்பரம், கண்காட்சி, இசை மற்றும் நாடகப்பிரிவு ஆகிய துறைகள் சில வருடங்களுக்கு முன்பு வரை தனித்தனியே இயங்கின. காலத்தின் தேவையால் தற்போது ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை அமைச்சக அளவிலும் வலியுறுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது கள விளம்பரம், கண்காட்சி, இசை மற்றும் நாடகப்பிரிவு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே துறையாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களைச் சென்றடையும் நோக்கில் தற்போது ட்விட்டர், முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேபோன்று இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் கவனிக்கத்தக்க வகையில் செய்திகளை சமூக ஊடகங்களில் நாம் உடனுக்குடன் சென்றடையச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து சென்னை தொலைக்காட்சி செய்திப்பிரிவு இயக்குநர் குருபாபு பலராமன், சமூக ஊடகங்களில் பொதிகை தொலைக்காட்சிப் செய்திப்பிரிவின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவின் சமூக ஊடகங்கள் தங்களது பரப்பை அதிகரித்து வருவது குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கிய அவர், எதிர்காலத்தில் மிக முக்கிய ஊடகங்களாக சமூக ஊடகங்களே திகழும் என்றும் இந்த பரப்பை பொதிகை தொலைக்காட்சிப் பிரிவு செய்தியாளர்கள் முழுமையான அளவில் பயன்படுத்திக் கொண்டு செய்திகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, மக்கள் தொடர்பக களஅலுவலர்கள், பொதி்கை தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆகியோரிடையே பேசிய பாதுகாப்புத்துறை மக்கள் தொடர்பு துணை இயக்குநர் மு. பொன்னியின் செல்வன், பல்வேறு சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது தொடர்பாகவும் அவற்றை முன்னிலைப்படுத்துவது எவ்வாறு என்றும், காணொலிகள், மற்றும் புகைப்படங்களை முறையாக பதிவேற்றி அவற்றை பொதுமக்களிடையே விரிவான அளவில் கொண்டு சேர்ப்பது குறித்தும் உள்ள தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அனைவரையும் வரவேற்று பேசிய மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குநர் ஜெ காமராஜ் கூறுகையில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தொலைக்காட்சி ஊடகங்களின் அடுத்தக் கட்டமாக சமூக ஊடகங்கள் திகழ்கின்றன என்றும் இந்த புதிய தொழில்நுட்பத்தையும், பொதுமக்களின் அணுகுதலையும், சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பெருமளவிலான வாசகர்களையும் நேயர்களையும் அணுகுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொலைக்காட்சி, வானொலி செய்திகள் குறிப்பிட்ட நேரத்தில் ஒலி, ஒளி பரப்பப்படுவதன் காரணமாகவும், ஒட்டுமொத்த செய்திக் கோர்வையை அவசியமின்றி பார்க்க, கேட்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும், சமூக ஊடகங்களில் அவரவருக்கு தேவையான குறிப்பிட்ட செய்திகள், தனித்தனியே வழங்கப்படுவதாலும் இத்தகைய ஊடகங்களுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதாக அவர் கூறினார்.

பேரிடர் காலத்தில் ஊடகத்தின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்நாடு, மாநில பேரிடர் மேலாண்மை ஆலோசகர் ராஜமாணிக்கம் முருகானந்த் விரிவாக ஆலோசனை வழங்கினார்.

இந்த பயிலரங்கின் நிறைவாக சென்னை அகில இந்திய வானொலி செய்திப் பிரிவின் ஆசிரியர் எஸ் ஜாய் நன்றி கூறினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply