நாட்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 28% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2021-22ல் 777 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தியை எட்டிய உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, மே 31 நிலவரப்படி, 137.85 மில்லியன் டன் ஆகும், இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த 104.83 மில்லியன் டன் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 28.6% அதிகமாகும். இந்தப் போக்கு ஜூன் மாதத்திலும், பராமரிக்கப்படுகிறது. கோல் இந்தியா லிமிடெட்டின் நிலக்கரி உற்பத்தி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் (ஜூன் 16, 2022 அன்று) உற்பத்தியை விட 28% அதிகமாகும். நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி இலக்கு 911 மில்லியன் டன் ஆகும், இது முந்தைய ஆண்டை விட 17.2% அதிகமாகும்.

உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் ஆண்டில் 8.11 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது, இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலக்கரி இறக்குமதியாகும். உள்நாட்டு மூலங்களிலிருந்து வலுவான நிலக்கரி வழங்கல் மற்றும் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக மட்டுமே இது சாத்தியமானது.கடந்த ஐந்து ஆண்டுகளில், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஜூன் 16ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு உள்நாட்டு நிலக்கரிச் சுரங்கங்களில் நிலக்கரி இருப்பு 52 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உள்ளது. இது மின் உற்பத்தி நிலையங்களின் 24 நாள் தேவைக்கு போதுமானது. கூடுதலாக, சுமார் 4.5 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு பல்வேறு கிடங்குகள் மற்றும் துறைமுகங்களில் உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply