இந்திய மீனவர்களை கடலில் மூழ்கடித்து ‘ஜல சமாதி’ செய்த இலங்கை கடற்படையினர்!-சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சேதமடைந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், இலங்கை அகதி சாம்சன் டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, கடந்த 18 ஆம் தேதி காலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

நெடுந்தீவுக்கும் – கச்சத்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடிப் படகைச் சிறைபிடித்து, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் அந்த மீன்பிடிப் படகின் பின்பகுதி, இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில், இலங்கைக் கடற்படை ரோந்து கப்பல் சேதம் அடைந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களைத் தாக்கியதுடன், மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகின் மீது மோதி மூழ்கடித்துள்ளனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த இலங்கை அகதி சாம்சன் டார்வின், மேசியா, நாகராஜன், செந்தில்குமார் ஆகிய 4 இந்திய மீனவர்களும் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, மீனவர்களின் சடலங்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். உண்மை இவ்வாறு இருக்க:

2021 ஜனவரி 18 அன்று இரவு நேரத்தில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறி இலங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 50 -க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளைக் கவனித்த ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், இந்திய மீன்பிடித் தொழிலாளர்களை பிடிப்பதற்காக முயற்சித்தபோது, ​​இந்திய மீனவர்களில் ஒருவர், தான் கைது செய்யப்படுவதை எதிர்க்கும் நோக்கத்தில் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த செயல்பாட்டில் அந்த இந்திய மீனவரின் மீன்பிடி படகு, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பலின் மீது மோதியதில், ரோந்து கப்பல் சேதமடைந்ததோடு, இறுதியில் அந்த மீன்பிடி படகு கடலில் மூழ்கி அதன் நிலைத்தன்மையை இழந்தது.

இந்த மோதலில் இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் சேதமடைந்ததால், பழுது பார்ப்பு பணிகளுக்காக அந்த ரோந்து கப்பல் பாதுகாப்பாக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது என, இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்.

சேதமடைந்த ரோந்து கப்பலை பாதுகாப்பாக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சேர்பதற்கு முயற்சித்த இலங்கை கடற்படையினர், கடலில் மூழ்கிய இந்திய மீனவர்களின் மீன்பிடி படகை உடனே மீட்பதற்கு போர்கால அடிப்படையில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அப்படி செய்து ருந்தால் தமிழகத்தைச் சேர்ந்த 4 இந்திய மீனவர்களை நிச்சயம் உயிரோடு காப்பாற்றியிருக்கலாம்.

மேலும், இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் ஒருவர், படகுடன் தப்பிக்க முயற்சித்தார் என்பதும், அப்போது அந்த இந்திய மீனவரின் மீன்பிடி படகு இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பலின் மீது மோதியதில், இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் சேதமடைந்தது என்பதும், நம்ப தகுந்ததாக இல்லை. இது இலங்கை கடற்படையினரின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்பது தெளிவாக தெரிகிறது.

உப்பு பெறாத விசியத்திற்கெல்லாம் ‘வீடியோ’ பதிவோடு செய்தி வெளியிடும் இலங்கை கடற்படையினர், இவ்விசியத்தில் மட்டும் ‘வீடியோ’ பதிவை மறைத்தது ஏன்?!

இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றால், இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையேயான ராஜ்ஜிய உறவில் சிக்கல் வரும் என்பதால், எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கடலில் மூழ்கடித்து ‘ஜல சமாதி’ செய்யும் சதித் திட்டத்தில் இலங்கை கடற்படை ஈடுப்பட தொடங்கியுள்ளது என்பதைதான் இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.

மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பல் மோதியதா?! (அல்லது) இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது, ரோந்து கப்பல் மீது மீனவர்களின் படகு மோதியதா?! என்பதை அறிய சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply