பசும் பாலின் மருத்துவக் குணங்கள்..!

பசுவின் பால்
(Cow’s Milk)

பாலர் கிழவர் பழஞ்சுரத்தோர் புண்ணாளி
சூலையர் மேகத்தோர் துர்ப்பலத்தோர் – ஏலுமிவர்
எல்லார்க்கு மாகு மிளைத்தவர்க்குஞ் சாதகமாமம்
நல்லாய் பசுவின் பால் நாட்டு.                       

குணம்: பசுவின் பால் குழந்தைகளுக்கும், வயதானோர்களுக்கும், நாட்பட்ட சுரம், காயங்கள், வயிற்று புண், வாதம், வயிற்று வலி, பால்வினை நோய்(மேக நோய்), வலுவின்மை, உடல் இளைத்தவர்கள், மிதமிஞ்சிய போகத்தால் நரம்பு தளர்ந்தவர்கள்மூளை சம்பந்தமான வியாதிஸ்தர்களுக்கு பசுவின் பால் நன்மை தரும்.

 விளக்கம் மற்றும் உபயோகிக்கும் முறை : – 

தாய்ப்பால் இல்லாத மற்றும் எலும்பும், தோலுமாக இருக்கும் நோஞ்சான் குழந்தைகளுக்கு பசும் பால் ஒரு அற்புதமான உணவாகும். சுத்தமான பசும் பாலுடன் சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சி ஆடையை நீக்கிக் கொடுத்து வர நல்ல சுகத்தைக் கொடுத்து தேகத்தைப் போஷிக்கும்.

மேலும், விரண ரோகிகளுக்கும், துர்ப்பல முடையவர்களுக்கும், உடல் இளைத்தவர்களுக்கும், மிதமிஞ்சிய போகத்தால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும், நெடுநாள் சுரத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கும், மூளை சம்பந்தமான வியாதிஸ்தர்களுக்கும், வாத ரோகிகளுக்கும், குடல் சம்மந்தமான வியாதியஸ்தர்களுக்கும், அஜீர்ணபேதி உடையவர்களுக்கும், நீர்த்தாரை விரணமுடையவர்களுக்கும் பசும் பால் அருமருந்தாகும். இதனால் சக்தி மிகுந்து அவர்கள் பழைய சுகத்தை அடைவார்கள். பால் சோறு சாப்பிட்டால் தேக பலம் பெறும்.

சுரம் ரோகிகளுக்கு சுத்தமான பசும் பாலுடன் சம அளவு தண்ணீர் கலந்து மூன்றிலொரு பாகம் சுண்டக் காய்ச்சி ஆடை நீக்கிக் கொடுக்க நல்லுணவாகும்.

சன்னிபாத சுரத்தில் Enteric (typhoid) Fever காய்ச்சிய பாலுடன் பார்லி அரிசியை மலர வேகவைத்து வடித்தெடுத்த கஞ்சியை 2 பங்கு கூட்டிக் கலக்கி கொடுப்பது சிறந்த பத்திய உணவாகும். சில சந்தர்ப்பங்களில் பசுவின் பாலைக் காய்ச்சி எலுமிச்சம்பழச் சாறுவிட்டு முறித்து, வடிகட்டித் தெளிவு நீரையும் கொடுப்பதுண்டு.

தேகமிளைத்தவர்களுக்கும், நரம்பு தளர்ந்தவர்களுக்கும் பசுவின் பாலை ஆடை கட்டாமல் கிளறிக் கொடுத்து பதமுற காய்ச்சிச் சிறிது சிறிது சீனா கற்கண்டு தூளிட்டு, இரவு படுக்கைக்கு போகும்போது தினந்தோறும் உட்கொண்டுவர நல்ல பலம் உண்டாகும்.

பசும் பாலில் சிறிது மஞ்சள் தூளிட்டுத் தினந்தோறும் காலையில் அருந்தி வந்தால் “வறட்டு இருமல்” குணமாகும்.

செய்கை : –  பலகாரி.

முக்கிய குறிப்பு: மீன், கோழி சாப்பிடும் போது பால், தயிர் சேர்க்கக்கூடாது.

–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

 

 

One Response

  1. MANIMARAN April 20, 2020 10:31 pm

Leave a Reply