பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்குழு கூண்டோடு கலைக்கப்படும்! 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ. 35-க்கும், சமையல் எரிவாயு ரூ.350-க்கும் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr. துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை!-முழு விபரம்.

திருச்சிராப்பள்ளி மக்களவை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக காலணி – Chappals (செருப்பு) சின்னத்தில் களமிறங்கியுள்ள “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள், இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் நினைத்து கூட பார்க்காத பல மக்கள் பிரச்சனைகளுக்கு  தமது தேர்தல் அறிக்கையின் மூலம் நல்ல தீர்வு வழங்கியுள்ளார்.

அந்த தேர்தல் அறிக்கையின் முழு விபரம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

கற்பு எனப்படுவது யாதெனில், சொன்னச் சொல் தவறாமல் நடப்பது…! 

படித்த வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

பொதுமக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு 6 மாதத்திற்குள் அடியோடு அகற்றப்படும்.

திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சர்வீஸ் ரோடு போர்க்கால அடிப்படையில் அமைத்துத்தரப்படும்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் கணேசா  ரவுண்டானாவில் மோதி அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தினை தடுக்கும் வகையில் ரவுண்டானாவை அகற்றிவிட்டு, கட்டிட பொறியாளர்கள் மற்றும் தொழிட்நுட்ப  வல்லுனர்களின் ஆலோசனைப்படி மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

குண்டும், குழியுமாக கிடக்கும் காட்டூர் பாப்பாக்குறிச்சி முதல் புத்தாபுரம் வரையிலான சாலை, புதிய தார்ச்சாலை அமைக்கப்படும்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் மற்றும் கொண்டயம்பேட்டை ஆகிய இடங்களில் அடிக்கடி நடக்கும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதற்காகவும், கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில்கொண்டு, சஞ்சீவி நகர் காவிரி ஆற்றுப்பாலம் அருகிலும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கொண்டயம்பேட்டை அருகிலும் கல்லணை செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்துத் தரப்படும்.

பாதுகாப்புத்துறையை தனியார்மயம் ஆக்குவதை தடுத்து நிறுத்துவோம். துப்பாக்கிதொழிற்சாலை (OFT), HAPP மற்றும் பெல் (BHEL) தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி பொன்மலையில் திறந்த வெளியில் செயல்படும் சந்தை நவீன உள்கட்டமைப்புடன் செயல்படுவதற்கு வழிவகை செய்யப்படும்.

பொன்மலை இரயில்வே பணிமனைக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில்கொண்டு பொன்மலை செல்வதற்காக ஜீ-கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துத்தரப்படும்.

மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க காவிரி ஆற்றின் இரு கரைகளும் மற்றும் மதகுகளும் பலப்படுத்தப்படும். திருச்சியின் கூவமாக இருக்கும் உய்யகொண்டான் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு தூர்வாரி தூய்மை செய்யப்படும்.

திருச்சி மேலப்புதூர் சுரங்கப் பாதையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால், போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெருத்த சிரமம் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சாலையோர சிறு / குறு / நடுத்தர வியாபாரிகள் எவ்வித அச்சுறுத்தல் மற்றும் அபராதம் இன்றி நிம்மதியாக வணிகம் செய்வதற்கு சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குடமுருட்டி பாலம் விரிவாக்கம் செய்யப்படும். திருச்சி – கரூர் சாலை விரிவுபடுத்தப்படும்.

திருச்சி முக்கொம்பு மேலணை சர்வதேச தரத்தில் சுற்றுலா மையமாக மாற்றப்படும். மேலும், ஆங்கிலேயர்கள் காலத்தில்  கட்டப்பட்ட வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த முக்கொம்பு கொள்ளிடம் பாலம் மற்றும் திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகில் கொள்ளிட ஆற்றில் சேதமடைந்த இரும்பு பாலம் ஆகியவற்றை போர்கால அடிப்படையில் புதுப்பித்து பாதுகாப்பதற்கு மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

இந்தியாவில் வாழும் அனைவருக்கும்  இலவசமாக கட்டாய கல்வி வழங்கப்படும். சேவை மனபான்மையோடு கல்வி நிறுவனங்கள் நடத்த முன் வருபவர்களுக்கு அரசு கால தாமதமில்லாமல் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போல,தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்  அரசு ஊதியம் வழங்க வேண்டும்.

இந்தியாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இந்தியாவில் இருக்கும் மதுபான ஆலைகள் அனைத்தும் நஷ்ட ஈடு வழங்காமல் மூடப்படும். இந்தியா முழுவதும் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் பசுமை காய்கறி மற்றும் உணவு தானியங்கள் விற்பனை மையங்களாக மாற்றப்படும்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விதவை பெண்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மதுக்கடைகள்தான். கணவனை இழந்த பெண்களின் நலம் காக்கும் பொருட்டு அவர்களுகென்று தனி நல வாரியம் அமைக்கப்படும். அவர்களின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்படும். கணவனை இழந்த பெண்களுக்கு காலதாமதமின்றி உதவித்தொகை வழங்குவதற்கு ஏதுவாக, கணவனின் இறப்பு சான்றிதழ் மட்டும் வழங்கினால் போதும் என்ற நடைமுறையை பின்பற்ற அரசு ஆணை பிறப்பிக்கப்படும். தற்போது 1000 ரூபாயாக இருக்கும் விதவைகள் உதவி தொகை, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலை 250 நாளாக உயர்த்தப்படும். மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள சம்பளம் முழுமையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் அனைத்தும் முழுமையாக தடுக்கப்படும்.

காலுக்கு போடுகின்ற செருப்பையும், சாலையில் ஓடக்கூடிய மோட்டார் வாகனங்களையும், குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து விற்பனை செய்கிறார்கள்!- ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை வீதியில் புழுதியில் வைத்து விற்கிறார்கள்! -இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு கட்டுவோம். காலுக்கு போடுகின்ற செருப்புக்குகூட அதன் விலையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டு விடுகிறார்கள்!- ஆனால், ஒரு விவசாயி தான் விலைவித்த விளைப் பொருட்களுக்கு விலை சொல்ல முடியாத நிலை இங்கு உள்ளது! இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்போம்.

விவசாய நிலங்களின் பாசனத்திற்காக மின் மோட்டார் பொருத்துவதற்கு இலவச மின் இணைப்பு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள குளம், குட்டை, ஏரி, ஆறு மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மைபடுத்தப்படும். 

60 வயது நிரம்பிய விவசாயி மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் உண்பதற்கு ஏற்றதாக இல்லை. எனவே, வறுமைக் கோட்டுக்கும் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 45 கிலோ புழுங்கல் பொன்னி அரிசியும், 10 கிலோ குண்டு (மாவு) அரிசியும், 5 கிலோ பச்சரிசியும் ஆகமொத்தம் ஒரு குடும்ப அட்டைக்கு 60 கிலோ அரிசி மத்திய தொகுப்பிலிருந்து நியாய விலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும். நியாய விலைக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் முழுமையாக தடுக்கப்படும்.

உணவுக்கு அரிசி இலவசம்! ஆனால் சிறுநீர், மலம் கழிக்க 5 ரூபாய் கட்டணம்! இந்த அவல நிலைக்கு உடனடி தீர்வு காணப்படும். பொது இடங்களில் உள்ள கட்டண கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் அனைத்தும் இலவச பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்களை அமர்த்தி  இலவச கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை தூய்மையாக பராமரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும். 

குடிதண்ணீரை விலைக்கு விற்கும் அவலநிலை முற்றிலும் ஒழிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள குடிதண்ணீரை விலைக்கு விற்கும் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். அந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தொகுப்பு ஊதியத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு நிலஅளவைத்துறை மூலம் தளப்பார்வையிட்டு வருவாய்துறை மூலம் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரயில்வேக்கு சொந்தமான இடங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் சூழல் அவசியம் ஏற்பட்டால், அவர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு மாற்று ஏற்பாடு அவசியம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் மூலம் இந்திரா குடியிருப்பு திட்டமும்,  பிரதம மந்திரி  குடியிருப்பு திட்டமும், மாநில அரசின் மூலம் அம்மா பசுமை வீடு திட்டமும் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்று வருகின்றது. ரூ.15 ஆயிரம் முதல் 30 வரை லஞ்சம் கொடுத்தால்தான் இத்திட்டத்தில் பயனாளியாகவே சேர முடியும். அப்படியானால் மீதமுள்ள தொகையில் எப்படி வீடு கட்ட முடியும்? மேலும், கட்டுமான பொருட்களின் விலையும், கட்டிடத் தொழிலாளர்களின் கூலியும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், இவர்கள் வழங்கும் தொகையில் கழிப்பறை மற்றும் குளியலறைதான் கட்ட முடியுமே தவிர, சத்தியமாக வீடு கட்ட முடியாது.  எனவே, மத்திய மாநில அரசுகளுக்கு ஏழை மக்கள் மீது உண்மையிலுமே அக்கறை இருக்குமேயானால், ஏழைகள் வீடு கட்டுவதற்கு குறைந்தப் பட்சம் ரூ.6 லட்சம் வழங்க வேண்டும்.

பெல் (BHEL) சிவில் நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், சரியான பராமரிப்பு மற்|றும் சுகாதாரமான முறையில் தீவனம் வழங்காததால் கொத்துக்கொத்தாக மான்கள் செத்துமடிகிறது. பெல் (BHEL) மான் பூங்காவில் உள்ள மான்கள் அனைத்தையும், இந்திய பிராணிகள் நல வாரியத்தின் கண்காணிப்பில் பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ் நாட்டில் செயல்படும் மத்திய அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். மத்திய. மாநில வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.

சாதாரண மனிதனின் அடையாளம் என்று சொல்லி, தனி நபர்களின் கண்விழி, கைரேகை ஆகியவற்றை பதிவு செய்து, சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் ஆதார் அட்டை பயன்பாட்டை, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனே இரத்து செய்யப்படும்.

நதிகளில் நவீன கனரக இயந்திரங்களை கொண்டு லாரிகள் மூலம் மணல் அள்ளுவது உடனே நிறுத்தப்படும். அதற்கு பதிலாக மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு பொதுப்பணி மற்றும் கனிமவள துறையின் மூலம் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணியாக இருக்கும் தினசரி பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்குழு கூண்டோடு கலைக்கப்படும். 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கும், 1 லிட்டர் டீசல் ரூ. 35-க்கும் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.350-க்கும் வழங்கப்படும். இதன் மூலம் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

இரண்டு பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் முதலாளிகள், அடுத்த 5 ஆண்டுகளில் 10 பேருந்துகளுக்கு உரிமையாளராக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். ஆனால், 1972-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், 31.03.2018 அன்று புள்ளிவிபரப்படி 2,254 உபரி பேருந்துகள் உள்பட, 21,744 பேருந்துகள் மட்டுமே தன்வசம் வைத்துள்ளது. இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சாலையில் இயக்குவதற்கே தகுதி இல்லாத பேருந்துகள். விபத்து காப்பீடும் இப்பேருந்துகளுக்கு இல்லை. இந்த பேருந்துகளில் தான்  நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்  பயணம் செய்கிறார்கள்.

அரசு பேருந்து கட்டணத்தை முன்அறிவிப்பின்றி ஒரே அறிவிப்பில் 67 சதவீதம் உயர்த்தியும் கூட, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்றும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஊழலும், ஊதாரித்தனமான நிர்வாகமும்தான்.

இந்த தேர்தல் அறிக்கையின் மூலம் தமிழக அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகின்றேன். 5 ஆண்டுகள் மட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை என்னிடம் ஒப்படையுங்கள். நான் லாபத்தில் இயக்கி காட்டுகிறேன். அப்படி என்னால் செய்ய முடியவில்லை என்றால், பொது இடத்தில் வைத்து என்னை தூக்கில் தொங்கவிடுங்கள். இந்த சவாலுக்கு நான் தயார்! தமிழ்நாடு அரசு நிர்வாகம் தயாரா?

முதலில் பொது வாகனப் போக்குவரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். போர்கால அடிப்படையில் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். அப்போதுதான்  தனிநபர்கள் வாகனப் பயன்பாடு சாலையில் குறையும். தனிநபர்கள் வாகனப் பயன்பாடு சாலையில் குறைந்தால்தான் வாகனங்கள் வெளியிடும் நச்சு புகையின் அளவு  குறையும். அப்போதுதான் நகர்புறங்களில் வசிக்கும் மற்றும் நடமாடும் மக்கள் நிம்மதியாக சுவாசிக்கவும் முடியும். இதன் மூலம் காற்று மண்டலம் மாசுப்படுவதை தவிர்க்க முடியும். இதையெல்லாம் செய்ய மறுத்தால், குடிதண்ணீரைப் போல சுவாசிக்க காற்றையும் விலைக்கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை உருவாகும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படும். சுங்கச் சாவடிகள் அனைத்தும் தேசிய விபத்து மற்றும் மீட்பு கண்காணிப்பு மையமாக மாற்றப்படும்.

பொருளாதார சீரழிவிற்கும், வணிகர்களின் குழப்பத்திற்கும் முக்கிய காரணமாக இருக்கும் ‘ஜி.எஸ்.டி’ வரிமுறை முற்றிலும் ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள வணிகர்கள், வணிக  நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர்களிடம் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை செய்து அதற்கு ஏற்றவாறு  புதிய வரி நிர்ணயம் செய்யப்படும்.

நாடு முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தும் ஆய்வு செய்து அதை ஆக்கிரமித்து வைத்துள்ள அதிகாரமிக்கவர்களிடமிருந்து மீட்கப்படும். மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடமும் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

காவல்துறையினரை தண்டல்காரர்களாக பயன்படுத்துவதை இனியும் அனுமதிக்கக் கூடாது. வாகன சோதனை என்ற பெயரில் 2 , 3 & 4 சக்கர வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல் செய்யும் முறை முழுமையாக தடை செய்யப்படும். இதற்கு ஏற்ற வகையில் மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். வெளிநாடுகளில் உள்ளதை போல சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் பதிவு எண்களை கண்காணித்து, மண்டல போக்குவரத்து அதிகாரிகள் மூலம் வாகன உரிமையாளருக்கு சட்ட ரீதியில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் பணிச்சுமை குறையும். உயரதிகாரிகளின் வீடுகளில் சட்ட விரோதமாக பண்ணை வேலை செய்ய காவலர்களை கட்டாயப்படுத்தும் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும் மற்றும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊடகத்துறையில் களப்பணியாற்றும் செய்தியாளர்கள், கேமிராமேன்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அச்சு, காட்சி மற்றும் இணையதள ஊடகங்களில் பணியாற்றும் நபர்களுக்கு அவர்களின் நலன் காக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்.

ஆங்கில (அலோபதி) ஊசி மருந்துகளை பயன்படுத்தாமல் பரம்பரை, பரம்பரையாக சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும்  இயற்கையான முறையில் மூலிகை மருத்துவம் செய்து வரும் வைத்தியர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்கப்படும்.

ஆங்கில (அலோபதி) ஊசி மருந்துகளை பயன்படுத்தி தொழில் செய்யும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியபதி மற்றும் இயற்கை பட்டதாரி மருத்துவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஏற்ற வகையில் ஆயுஷ் அமைச்சகம் (MINISTRY OF AYUSH) மூலம் உரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

அரசு மருத்துவர்கள் அனைவரும் அரசாங்க மருத்துவமனைகளில் மட்டும்தான் பணியாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு, பணம் சம்பாதிக்கும் ஆசையில் தனியார் மருத்துவமனைகளில் பகுதி நேரமாகவோ (அல்லது) முழு நேரமாகவோ திருட்டுத்தனமாக பணியாற்றுவது ஏழை மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இதுபோன்ற துரோகச் செயலில் ஈடுப்படுபவர்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்யபடுவார்கள்.

நாடு முழுவதும் பஸ், இரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள், பிச்சைக்காரர்கள்  மற்றும் மொழி தெரியாத நபர்களை இனம் கண்டு மறுவாழ்வு இல்லங்கள் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருநங்கைகளுக்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு அடைவதற்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சி மற்றும் கடனுதவி வழங்கப்படும்.

தங்க நகை விற்பனையில் நடைபெறும் முறைகேடுகள் அனைத்தையும் தடுப்பதற்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.

தமிழக மீனவர்களின் நலன் காக்கும் பொருட்டு கட்சத்தீவு மீட்கப்படும். அதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவையை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இலங்கை இறுதி யுத்ததில் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர்களை கொடூரமாக படுகொலை செய்த குற்றவாளிகளை, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை தொகுதி மக்களின் கோரிக்கைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை  உடனுக்குடன் தெரிந்து கொண்டு, அதை  நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் ஒரு புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டி வைக்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்பத்தில் தகவல் தெரிவிக்க மின் அஞ்சல் முகவரியும், வாட்சப் மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப அதற்கான அலைபேசி எண்களும் அனைவருக்கும் வழங்கப்படும். பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் இதற்கென்று சிறப்பு தனிப்பிரிவு 24 மணிநேரமும் செயல்படும்.

இவ்வாறு தமது தேர்தல் அறிக்கையில் Dr.துரைபெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.

-கே.பி.சுகுமார்.

குடிநீரை விலைக்கு விற்கும் நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும்; நாடு முழுவதும் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் தேர்தல் அறிக்கை.
மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை.

Leave a Reply