திருச்சி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித அந்தோணியார் ஆடம்பர தேர் பவனி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி -கல்லணை சாலையில் காவிரியின் வலது கரையில் அமைந்துள்ள காந்திபுரம் கிராமத்தில், மனிதருள் புனிதராக விளஙகிய புனித அந்தோணியார் திருஉருவ ஆடம்பர தேர் பவனி தற்போது நடைப்பெற்று வருகிறது. புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சம்பர ஊர்வலம், இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனித சவேரியார் ஆலயம் வரை சென்று, அங்கிருந்து மறுபடியும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தை வந்தடையும். இன்று விடிய, விடிய நடைபெறும் சம்பர ஊர்வலம், அதன் பின் இன்று அதிகாலை நிலைகொள்ளும்.

இவ்விழாவையொட்டி அன்னதானமும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்றத்தினரும், காந்திபுரம் கிராமப் பொதுமக்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.

யார் இந்த அந்தோணியார்?-இதோ அதற்கான வரலாறு: நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் புனித அந்தோணியார் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி, இவர்களுக்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு, பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.

ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு, தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219-ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பிப்ரவரி 1220-ல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221-ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோணியார் மடத்தின் பெயரால் ‘அந்தோணி’ என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார்.

சிறிது காலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்று முதல் அந்தோணியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

தாம் வாழ்ந்த காலத்திலும், இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோணியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால், துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். 

புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோணியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.

1231-ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய் வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோணியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.

1946-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ம் பத்திநாதர் புனித அந்தோணியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார். இவரின் பெயரால் கச்சத் தீவு உள்பட உலகம் முழுவதும் எண்ணிலடங்கா  திருத்தலங்கள் உள்ளது.

– துரை திரவியம்.

 

Leave a Reply