ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சி.பார்த்திபன், (வயது 45) என்பவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். 02.01.2019 அன்று மாலை 04.00 மணியளவில் கோயம்பேடு, சின்மயா நகர், கிரேஸ் தங்கும் விடுதியிலிருந்து இரண்டு நபர்களை சவாரி ஏற்றிக்கொண்டு, பி.எச்.ரோடு, ரோகிணி தியேட்டர் எதிரே உள்ள லான்சன் டோயட்டோ கார் ஷோரூம் அருகே அவர்களை இறக்கிவிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆட்டோவின் பின் இருக்கையில் இருந்த லேப்டாப் பையில் அதிகளவில் பணம் இருந்ததைப் பார்த்து K11 சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அச்சமயம் முகமது அசாருதீன் என்பவர் ஆட்டோவில் சவாரி செய்தபோது, பணத்தை தவறவிட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார். K11 சி.எம்.பி.டி காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து, ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பணம் அடங்கிய பையை முகமது அசாருதீனிடம் ஒப்படைத்தார்.

நேர்மையான முறையில் பணம் அடங்கிய பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் 03.01.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

– கே.பி.சுகுமார்

Leave a Reply