தீவிரவாதிகளை வேட்டையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு காவல் படை வீரர்!

தீவிரவாதிகளை சுட்டு கொன்றதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு காவல் படை வீரர் பிரகாஷ்.

எல்லைப் பாதுகாப்பு பணியில் சக வீரர்களுடன் பிரகாஷ்.

தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் மத்திய பாதுகாப்பு காவல் படை வீரர் பிரகாஷ்.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் கிராமம், வடக்கு – தெற்கு பட்டியைச் சேர்ந்த செல்வம்,  சீதாலெட்சுமி தம்பதியின் மகன் பிரகாஷ். இவர் ஆசிரியராக வேண்டும் என்பது அவர் பெற்றோரின் விருப்பம்.

ஆனால், காவல் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பிரகாஷின் கனவு. ஒரு பக்கம் பெற்றோரின் விருப்பப்படி பிரகாஷ் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். இன்னொரு பக்கம் காவல் துறையில் சேர்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டார். அதற்கான தேர்வுகளை தொடர்ந்து எழுதினார்.

அவர் விருப்பப்படியே மத்திய பாதுகாப்பு காவல் படை (CRPF)-யில் தேர்வு செய்யப்பட்டார். மத்திய பாதுகாப்பு காவல் படை (CRPF)-யில் வேலை கிடைத்துள்ள விபரத்தை பிரகாஷ் தன் தாய், தந்தை மற்றும் சகோதரியிடம் தெரிவிக்கிறார்.

நீ ஆசிரியராக வேண்டும் என்று தானே உன்னை படிக்க வைத்தோம். ஆனால் நீ, வீட்டுக்கு ஒரு ஆண்பிள்ளையாக இருந்துக் கொண்டு, பாதுகாப்பு படைக்கு அதுவும் தீவிரவாதிகள் நடமாடும் வடநாட்டிற்கு போகபோகிறேன் என்கிறாயே?! என்று புலம்பியுள்ளனர்.

அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, மத்திய பாதுகாப்பு காவல் படை (CRPF) -யில் காவலராக பணியில் சேர்ந்த பிரகாஷ். காஷ்மீர் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளை, வேட்டையாடி வீட்டிற்கும், தாய் நாட்டிற்கும் பெருமைச் சேர்த்துள்ளார்.

ஆம், தீவிரவாதிகளை சுட்டு கொன்றதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விருது பெற்றுள்ளார்.

பிரகாஷின் வீரத் தீர செயல்களை பாராட்டி, இந்திய அரசாங்கம் விருது வழங்கி கௌரவித்ததை நேரில் கண்ட அவரது தாய், தந்தை மற்றும் சகோதரி அகல்யா ஆகியோர், மகிழ்ச்சியில் உறைந்து போனார்கள்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தேசப் பாதுகாப்பு பணியில் சேர்ந்து, தீவிரவாதிகளை வேட்டையாடிய பிரகாஷின் தியாகம் உண்மையிலுமே போற்றத்தக்கது.

-மஹரிபா, ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply