அடிப்படை வசதிகளை செயல்படுத்த கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வெள்ளக்கடை. இந்த கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை 10:45 முதல் 12:00 மணி வரை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

வெள்ளக்கடை கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பொதுக்கிணறு ஒன்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெட்டியது. அந்த கிணற்றின்  சுற்றுச்சுவர் கட்டிடம் பழுதடைந்து கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக சரிய துவங்கி கடந்த 8-ம் தேதி அன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, அந்த கிணற்றின் சுற்று சுவர் முழுவதும் இடிந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. கிணறு தரைமட்ட கிணறாக மாறியது. இதனால் பொதுமக்கள் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கிணற்றுக்கு மாற்றாக, அதனருக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு புதிதாக கிணறு வெட்டும் பணி துவங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பணியை ஒப்பந்தாரர் கிடப்பில் போட்டுள்ளார். பணி நிறைவடையாததால் அந்த இடம் குட்டை போல் காட்சியளிக்கிறது.

இரண்டு கிணற்றில் இருந்தும் தண்ணீர் எடுக்க முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்படாதது, இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் கட்டாதது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம மக்கள் ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

அங்கு வந்த ஏற்காடு வட்டாட்சியர் சுமதி, பி.டி.ஓ. ராமசந்தர், காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். பி.டி.ஓ. கிணற்றின் கட்டுமான பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தருவதாக கூறியதையும் மக்கள் ஏற்கவில்லை. பின்னர் அவர் மக்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்திரவாத கடிதம் கொடுத்ததையடுத்து, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சேலம் – ஏற்காடு மலைப்பாதையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

– நவின் குமார்.

Leave a Reply