பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி ஆதரவு திட்டத்தின் 23-வது தவணைத் தொகையை பிரதமர் விடுவிக்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி இம்மாதம் 20, 21 தேதிகளில் மேற்கு வங்கம் செல்கிறார். ஜூன் 20 அன்று பிற்பகல் 3:45 மணிக்கு ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வர் நகரில் நடைபெறும் மேற்கு வங்க மாநில உதய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில்  பிரதமர் பங்கேற்கிறார்.  பின்னர், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

ஜூன் 21 அன்று காலை 6:30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 12-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் பொதுமக்களிடையே அவர் உரையாற்றுகிறார். இதனையடுத்து காலை 9:15 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் துனாகிரி, ஐஎன்எஸ் ஷன்சோதக், ஐஎன்எஸ் அக்ரே ஆகிய 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

பின்னர், ரயில்வே, விவசாயம், ஊரக மேம்பாடு, மீன்வளம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகளுக் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.  திட்டங்கள்  அம்மாநிலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வாதார மேம்பாடு, விவசாயிகளின் நலன் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் உத்வேகம் பெற வழிவகுக்கும்.

இதனையடுத்து பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ், 23-வது தவணைத் தொகையை பிரதமர் விடுவிக்கிறார்.  இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக 18,880 கோடி ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தின் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவர். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 4.46 லட்சம் கோடி ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ரசாயன உரங்கள் பயன்பாடின்றி பாரம்பரிய வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலும், தேசிய வேளாண் இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், வருடாந்திர செயல்திட்டத்தின் மூலம் நடப்பாண்டின் 346 இயற்கை வேளாண் தொகுதிகள் உருவாக்கப்பட்டு 17,300 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை வேளாண் நடைமுறைகள் மேம்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில், உயிரி இடுபொருள் ஆதார மையம் மற்றும் கிருஷி சக்தி திட்டங்களை  வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனையடுத்து 590 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்கிறார். இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள 50 லட்சம் விவசாயிகளின் 14 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் விளைநிலங்கள்  பயிர்க் காப்பீடு வசதியைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ், 28140 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க் காப்பீடு வழங்கப்படுகிறது.

Leave a Reply