தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக, தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முக்கியத் திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தென்கொரியாவின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனமான HD Korea Shipbuilding & Offshore Engineering (HD KSOE) நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் திரு. யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது, தூத்துக்குடியில் உலகத் தரத்தில் கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையை அமைப்பது, அதன் செயல்பாடுகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.38,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கப்பல் கட்டுமானம், பொறியியல், உற்பத்தி, துறைமுக சேவைகள் மற்றும் துணைத் தொழில்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே, தூத்துக்குடிக்கு ரூ.38,000 கோடி முதலீட்டை ஈர்த்ததற்கான அரசாணையை முதலமைச்சரிடம் காட்டி அமைச்சர் கீர்த்தனா வாழ்த்து பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திவாஹர்
