ஏற்காடு அருகே சாலை அமைக்க முயன்ற கிராம மக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரமங்கலம் ஊராட்சியில், தங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்க முற்பட்ட 18 கிராம மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்குட்பட்ட மாரமங்கலம் ஊராட்சியில் கொட்டச்சேடு கிராமம் முதல் செந்திட்டு கிராமம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு, கரடு முரடான மண் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக செந்திட்டு, காளிக்காடு, அரங்கம், பெலாக்காடு, சின்னமதூர், பெரியமதூர், சின்ன வீட்டு களம், பெரிய வீட்டு களம், கேழையூர், இரங்காடு, கோழிக்கல், சுண்டக்காடு, குட்டமாத்திக்காடு, மாவுத்து, கொம்புதூக்கி, கூத்துமுத்தல், சின்னேரிக்காடு, பாரக்காடு உள்ளிட்ட கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கிடையில் சென்று வருகின்றனர்.

இந்த பாதை அங்குள்ள தனியார் எஸ்டேட் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கிராம மக்கள் நீதிமன்றத்தை அணுகி, கடந்த 2015 ஆம் ஆண்டு வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை மீட்டனர். பின்னர் கடந்த மூன்றாண்டு காலத்திற்கு மேலாக இந்த மண்பாதையை சீரமைத்து தார் சாலை அமைத்து தரக்கோரி அரசிற்கு பல முறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் 18 கிராமங்களை சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட மக்கள் தாங்களாகவே இனறு காலை முதல் மண்பாதையை சீரமைக்க துவங்கினர்.

தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர் கிராம மக்கள் சாலை அமைக்கும் இடத்திற்கு வந்து, சாலை அமைக்க கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர்.

மேலும், இத்தனை ஆண்டுகளாய் உடல்நிலை பாதிக்கப்படும் போதும், கர்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்படும்போதும், இந்த சாலையை மிகவும் சிரமப்பட்டே கடந்து வருகிறோம். விரைவில் இந்த சாலையை அரசு அமைத்து தராவிட்டால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என, கிராம மக்கள் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-நவின்குமார்.

Leave a Reply