திருச்சி காந்தி மார்கெட் இடமாற்றம் விவகாரம்!- உறங்காமல் விழித்திருக்கும் திருச்சி மாநகர காவல்துறையினர்..!

திருச்சி காந்தி மார்க்கெட் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், 149 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்துவிதமான காய் கறிகள், பூ, பழங்கள், வாழைக்காய், தேங்காய் மற்றும் மீன், இறைச்சி விற்பனை ஆகியவை மொத்தமாகவும், சில்லரையாகவும்,  விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கமிஷன் மண்டிகள் ஏராளமாக இருக்கிறது.

மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதின் காரணமாக, இரவு, பகல் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில்  இயங்கி வந்த மொத்த காய்கறி, கனி, பூ விற்பனை ஆகியவற்றை போக்குவரத்து நெரிசல் காரணமாக, திருச்சி – மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ. 77 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட்டிற்கும்,  திருச்சி காந்தி மார்க்கெட் ஜப்-ஜெயில் ரோட்டில் இயங்கி வந்த மொத்த விற்பனை வெங்காய மண்டிகளை, திருச்சி – சென்னை -தேசிய நெடுஞ்சாலையில், பழைய பால்பண்ணை, சர்வீஸ் சாலை  அருகே உள்ள  பகுதிக்கும் மாற்றம் செய்து திருச்சி மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதைச் சகித்துக்கொள்ள முடியாத வியாபாரிகள், பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். காந்தி மார்க்கெட்டில் இருந்து கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யமாட்டோம் என்று, வியாபாரிகள் தொடர்ந்து பிடிவாதம் காட்டியதின் விளைவாக, காந்தி மார்க்கெட்டிற்க்குள்  கனரக வாகனங்களுக்கு ஜீன் 30-தேதி முதல் அனுமதி இல்லை என, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராஜாமணி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இதனால், காந்தி மார்க்கெட்டிற்க்குள் வரும் பிரதான மற்றும் கிளை சாலைகள் அனைத்திலும் சோதனை சாவடிகள் அமைத்து, காந்தி மார்க்கெட்டிற்க்குள் வர முயற்சிக்கும்  கனரக வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பும்படி  காவல் துறையினருக்கு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரவு, பகல் எந்நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, திருச்சி மாநகர காவல்துறையினர் உறங்காமல் விழித்திருந்து பணியாற்றி வருகின்றனர்.

இதனால் காந்தி மார்க்கெட்டிற்குள் கனரக வாகனங்கள் வருவது முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் காவல்துறையினர் பல இடங்களில் வெளிப்படையாக முகாமிட்டுள்ளதால், திருச்சி மாநகர பகுதிகளில் கொலை, கொள்ளை, வாகனத் திருட்டு, வழிபறி, செயின் பறிப்பு… போன்ற குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து இருக்கிறது. மேலும், முன்னாள், இந்நாள் ரௌடிகளின் வெளிப்படையான நடமாட்டமும் பெருமளவில் குறைந்து இருக்கிறது.

காந்தி மார்க்கெட் இடமாற்றம் பிரச்சனையால், திருச்சி மாநகர காவல்துறையியில் மிக பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இப்பணி நிரந்தரமாக தொடர்ந்தால், மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply