பெண்ணை கட்டிப்போட்டு தாலி செயின் உட்பட 13 பவுன் நகை கொள்ளை! – திருவெறும்பூர் போலிசாரை திணறடிக்கும் கொள்ளையர்கள்.

13 பவுன் நகையை பறிக்கொடுத்த ரெஜினாமேரி என்கிற செல்வராணி.

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், தனியார் ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளரின் மனைவியை பட்டப் பகலில் கட்டிபோட்டு விட்டு தாலி செயின் உட்பட 13 பவுன் தங்க நகையை 3 பேர் கொள்ளையடித்து சென்ற சம்பவம், திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காவிரி நகர் 4-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் அந்தோணிமுத்துதுரை, இவர் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவி ரெஜினாமேரி என்கிற செல்வராணி (வயது 45) இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்து திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் என்று செல்வராணி வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்களை செல்வராணி நீங்கள் யார்? என்று கேட்டதற்கு அவர்கள் செல்வராணி தாயார் பெயரை கூறியுள்ளனர். அதனால் செல்வராணி அவர்களை வீட்டின் உள்ளே அழைத்து அமர செய்து விட்டு, டீ போட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

அப்போது வீட்டிற்குள் அமர்ந்திருந்த 3 பேரும் வீட்டை நோட்டமிட்டு செல்வராணி மட்டும்தான் உள்ளார் என்பதை அறிந்து கொண்டு, செல்வராணியை தாக்கி உள்ளனர். பின்னர் அவரது கை கால்களை கட்டியதோடு வாயில் துணியை வைத்து கட்டி வீட்டில் உள்ள ஒரு அறையில் தள்ளியுள்ளனர்.

பின்னர் செல்வராணியிடமிருந்த தாலி செயின், வளையல், செயின், மோதிரம் உட்பட் 13 பவுன் நகையை பறித்து கொண்டதோடு, செல்வராணியிடமிருந்து பீரோ சாவியை வாங்கி பீரோவையும் திறந்து பார்த்துள்ளனர். ஆனால், பீரோவில் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் 13 பவுன் நகையோடு தப்பி சென்றவிட்டனர். இதில் செல்வராணி மயக்கமாகியுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து ஒரு வழியாக எழுந்து கணவர் அந்தோணிமுத்துதுரைக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அந்தோணிமுத்துதுரை வீட்டிற்கு வந்து, இது சம்மந்தமாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில், திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சேகர், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மதன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகையை பதிவு செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர்கள் அந்தப் பகுதிக்கு வந்ததாகவும், அப்போது அந்தோணிமுத்துதுரையின் மகன் ஜோயலின் நண்பர்கள் என்று கூறி வீட்டை நோட்டமிட்டு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

திருவெறும்பூர் பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

 

 

Leave a Reply