பெண் காவலர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா திருச்சியில் நடைப்பெற்றது!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பெண் காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் காவல்துறை போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு கூடுதல் உதவி இயக்குநர் கரன்சின்கா கலந்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் புதிதாக காவல் துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 41 பயிற்சி மையங்களில் கடந்த நவம்பர் முதல் தேதியிலிருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தது.

அதில் 5 இடங்களில் பெண் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் ஒன்றான திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் உள்ள பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 303 பெண் காவலர்களுக்கான பயிற்சி முடிவடைந்தது. அவர்களின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நடந்தது.

இந்த விழாவிற்கு பயிற்சி பள்ளி முதல்வரும், ஏடிஎஸ்பியுமான கணேசன் தலைமை வகித்தார். துணை முதல்வரும் டிஎஸ்பியுமான மனோகர் முன்னிலை வகித்தார். அதில் தமிழக காவல்துறையின் போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு கூடுதல் உதவி இயக்குநர் கரன்சிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் அணிவகுப்பு, யோகா, கராத்தே, மாஸ் பீட்டி, மற்றும் பெண் கமோண்டோ படையின் சகாசங்களை கண்டுகளித்தார்.

பின்னர் பயிற்சி காவலர்களுக்கிடையே நடந்த சட்டம் பற்றிய போட்டியில் முதல் பரிசை அருள்ஜோதியும், இரண்டாவது பரிசை பிரியங்காவும், 3வது பரிசை ஹேமாவும், பேரட் போட்டியில் பிரியா முதல் இடத்தையும், அபிராமி, ராதா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், ரதி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நந்தினி முதல் இடத்தையும், தமிழரசி, ஜெயகிருபா ஆகியோர் இரண்டாம் இடத்தையும், வைஜெயந்தி 3ஆம் இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு மெடல்களையும் சான்றிதழ்களையும் கரன்சின்கா வழங்கினார்.

மேலும், தற்போது பயிற்சி முடித்த 303 பேரும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு மாதம் பணியாற்றுவார்கள் என்றும் பின்னர் நேரடியாக ஏ.ஆர். போலீசாக போவர்கள் என்றும், இவர்கள் பட்டாளியனுக்கு போகமாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விழாவில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தனது மகள்கள் செய்த சாகசங்களை கண்டு மகிழ்ந்தனர்.

அணிவகுப்பின் போது பயிற்சி காவலர்களுக்கு ஏதேனும் அடிப்பட்டால் முதல் உதவி அளிப்பதற்காக திருவெறும்பூர் வட்டார மருத்துவமனையின் நடமாடும் வாகனம் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply