கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கலவரமில்லாமல் நடக்குமா?

கர்நாடகா மாநிலத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில், நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி, காப்பர், லேப்டாப், டி ஷெர்ட்ஸ், மதுப்பாட்டில்கள், துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள்,  லாரி மற்றும் இரு சக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை, கர்நாடகா காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அனுமதிப்பெறாமல் 12537 சுவர் விளம்பரங்கள் எழுதியதால், 17693 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது இடங்களில் சட்ட விரோதமாக 7711 பதாகைகள் வைத்ததால், 06 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தனியார் இடங்களில் எழுதப்பட்ட 6866 சுவர் விளம்பரங்கள், 7949 சுவரொட்டிகள், 2543 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுப்பதற்காகவும், தேர்தல் முறைக்கேடுகளை கண்காணித்து தடுப்பதற்காகவும், 1540 பறக்கும் குழுக்களும், 2131 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் முறைக்கேடுகளை தடுக்க முடியாமல், அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதனால், கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கலவரமில்லாமல் நடக்குமா? என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சார்பில் வழங்கப்படும் டீ, காபி மற்றும் பலகாரங்களை, பொது இடத்தில் நின்று வாங்கி சாப்பிடுவதற்கே தயங்கினார்கள். அதை கேவலமாகவும், கௌரவக் குறைச்சலாகவும், குற்றமாகவும் கருதினார்கள். அதில் ஒரு சிலர், அதை வாங்கி அருகில் இருக்கும் சின்ன குழந்தைகளிடம்  கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு வாக்காளர்களிடம் நேர்மையும், ஒழுக்கமும் இருந்தது.

அதேபோல் வாக்காளர்களுக்கு டீ, காபி மற்றும் பலகாரங்கள் வழங்குவதையே பெரும் பொருட் செலவாக வேட்பாளர்கள் அன்று கருதினார்கள். அந்த அளவிற்கு வேட்பாளர்களிடம் எளிமையும், ஓரளவு தூய்மையும், யோக்கியத் தன்மையும் இருந்தது.

ஆனால், இன்று வேட்பாளர்களும் சரியில்லை; வாக்காளர்களும் சரியில்லை. எல்லாமே தலைக் கீழாக மாறிவிட்டது. இந்தியா முழுவதும் இன்றைக்கு இதுதான் நிலமை.

இந்நிலை மாறாத வரை அரசியல் என்பது தொழிலாளாகவும், தேர்தல் என்பது வியாபாரமாகவும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com 

 

 

 

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களுக்கு அரிவாள் வெட்டு!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) சார்பாக நீர் மோர் பந்தல்!

Leave a Reply