நீண்ட நாட்களாக செயல்பாட்டுக்கு வராத பள்ளி மாணாக்கர்களுக்கான நடமாடும் ஆலோசனை மையம் செயல்பாட்டுக்கு வருமா?

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம் செயல்படாமல் கிடப்பில் உள்ளது.
பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, சுற்றுப்புறச்சூழல், குடும்ப சூழ்நிலை, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனச் சோர்வு, மனக் குழப்பம், பாலியல் பிரச்சனைகள், தேர்வு அச்சம், மதிப்பெண் நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதும், உடல் மற்றும் மன ரீதியாக பாதித்து கல்வியைக் கைவிடும் நிலையும், தேர்வை புறக்கணிப்பதும், மதிப்பெண்களை இழப்பதும் நிகழ்கிறது.

இச்சூழலை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்த, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நடமாடும் ஆலோசனை மையமானது டெம்போ டிராவல் வேனில் எல்சிடி டிவி, ஒலிபெருக்கிகள், சிடி பிளேயர்கள் போன்ற ஆலோசனைக்கு தேவையான உபகரணங்களுடன் படிப்படியாகத் தொடங்கப்பட்டன. மேலும், உளவியல் ஆலோசகரும் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அவர் கல்வித் துறை அதிகாரிகள் குறிப்பிடும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் பிரச்சனைகளுக்கு உளவியல் ரீதியாக ஒளிப்படக் காட்சியுடன் ஆலோசனை வழங்கி வருவது, குறிப்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளான குடும்பச் சூழல், தேர்வு நேர அச்சம், மாணவர்களிடையே குழு மோதல் போன்ற இடையூறுகளால், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கப்படுவதுடன், உடல்பயிற்சி, சரிவிகித உணவு போன்ற உடல்நல ரீதியிலான ஆலோசனைகளும் வழங்கப்படுவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாமல் இருக்கும் வாகனத்தை மாணவர்களின் நலன் கருதி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மாணாக்கர் நலனில் கவனம் செலுத்தி தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்தும் நிலையில் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் செயல்படாமல் இருப்பது ஏன்? யார் காரணம்? நடவடிக்கை எடுக்குமா அரசு?

-K.மகேஸ்வரன் 

Leave a Reply