சாலையோரம் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள்! -நுகர்பொருள் வாணிப கழக  அதிகாரிகளின்  அலட்சியம்.

திருவாரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 20 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க  மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது. 2-ம் கட்டமாக மன்னார்குடியில் 50 நெல் கொள்முதல் நிலையமும், திருவாரூரில் 50 நெல் கொள்முதல் நிலையமும் திறக்க உத்தரவிடப்பட்டது.

திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெல்லை வாங்க ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்கள் ஒரு சில திறக்கப்பட்டன. நெல் கொள்முதல் நிலையத்தில் அலுவலர், உதவியாளர், காவலர் மற்றும் லோடு மேன்கள் நியமிக்கப்பட்டனர்.

நிலத்தின் சிட்டா அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வங்கி புத்தகம், செல்போன் எண் ஆகியவை நுகர்பொருள் வாணிப கழகத்தால் நெல் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள் கொண்டு  வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரேடு ஏ ரக நெல் ஊக்க தொகையுடன் குவிண்டால் 1-க்கு ரூ.1660 (1590+70=ரூ1660), பொது ரக நெல் ஊக்க தொகையுடன் குவிண்டால் 1-க்கு ரூ.1600 (1550+50=ரூ.1600) ஈரப்பதம் 17 சதவீகிதம் வரை  உள்ள தரமான  நெல்  கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் பணியாளர்கள் பணமாகவோ, கூடுதலாக நெல்லாகவோ பெறுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குடவாசல் அருகில் அத்திக்கடை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் இருந்து   நெல் கொள்முதல் நிலையங்களில் சேகரிக்கப்பட்ட  நெல் மூட்டைகளை  சாலையோரம் திறந்தவெளியில்   அடுக்கி வைத்துள்ளனர். இரவில் திருடுபோகும் அபாயம் உள்ளது. மேலும், மழை மற்றும் காற்று வீசினால் நெல் மூட்டைகள் சேதமடையும். இதனால் நுகர்பொருள் வாணிபக் கழக்கத்துக்கும். அரசுக்கும் பெருத்த இழப்பு ஏற்படும். இதை தடுக்க வேண்டிய நுகர்பொருள் வாணிப கழக  அதிகாரிகள்  அலட்சியமாக இருக்கின்றனர்.

இதை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

காலுக்கு போடுகின்ற செருப்பையும், சாலையில் ஓடுகின்ற வாகனத்தையும் கண்ணாடி அறைக்குள் வைத்து விற்பனை செய்யும் இந்த சமூகம், உயிர் வாழ்வதற்காக பயன்படுத்தப்படும் உணவு தானியங்களை திறந்த வெளியில் போட்டு வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?

-க.குமரன்.

 

 

One Response

  1. Kamatchi February 24, 2018 7:14 am

Leave a Reply