திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால் பண்ணை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

திருச்சி– சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை 9 மணியளவில், திருச்சி பழைய பால் பண்ணை அருகே, சிமெண்ட் கான்கிரீட் கலவையை ஏற்றி வந்த லாரி ஒன்று, சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குள் வேகமாக நுழைந்த  வாகனத்தின் மீது மோதி விடக்கூடாதென்பதற்காக, திடீரென்று பிரேக் அடித்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலைகுப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுனர் கருப்பையா, சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான லாரியை அங்கிருந்து அகற்றும்வரை போக்குவரத்தை சீர்செய்தனர்.

கடந்த  காலங்களில் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு வருகை தந்தபோது, சர்வீஸ் சாலையில் இருந்த வேகத்தடைகளை பல இடங்களில் அகற்றினார்கள். ஆனால், மறுபடியும் அந்த இடங்களில் மீண்டும் வேகத்தடைகளை அமைக்கவில்லை. இதனால் சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்கள், அதிவேகமாக வருகிறது.

எனவே, முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக அப்புறப்படுத்தப்பட்ட வேகத்தடைகளை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உடனே அமைக்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய விபத்துக்களை சந்திக்க நேரிடும்.

-ச. ராஜா.

 

Leave a Reply