அறுவடைக்கு ஆள்பற்றாக்குறை! – களமிறங்கும் கதிரடிக்கும் இயந்திரங்கள் ! –காவிரி டெல்டா நிலவரம்.

‘ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழியாலும், ‘தைப்பபிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையாலும், காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் 1050, 42, கோ 50, குண்டு ரகம், சன்ன ரகம் போன்ற நெற்பயிர்களை பயிரிட்டனர்.

ஆற்றுநீர், வாய்க்கால் நீர் போதிய அளவில் கிடைக்காவிட்டாலும், ஆங்காங்கே போர்வெல் மூலம் கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி நெற்பயிரை விளைவித்தனர். தற்போது பாதி நிலங்கள் நெல் மணிகள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது.

கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பலர் தவித்து வருகின்றனர். இதனால் அறுவடை செய்யும் கனரக இயந்திரங்கள் நன்கு விளைந்துள்ள நெற் வயல்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.

2017-ம் ஆண்டு நெல் அறுவடை இயந்திரத்துக்கு வாடகையாக ரூ.1600, பேட்டா ரூ.200 ஓர் ஏக்கருக்கு வழங்கினர். இந்த (2018) ஆண்டு வாடகையாக ரூ.1800, பேட்டாவாக ரூ.200 தற்போது வழங்கும் நிலை உள்ளது.

கூலி ஆட்களை வைத்து நெல் அறுவடை செய்ய ஓர் ஏக்கருக்கு விளையும் நெல்லில் 7 மூட்டைக்கு ஒரு முட்டை என்ற வீதம் கூலியாக கொடுக்க வேண்டியுள்ளது.

தற்போது பருவ சூழ்நிலை, இயற்கை இடர்ப்பாடு காரணமாக நெற்பயிர் போதிய விளைச்சல் இல்லை என்பதே விவசாயிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.

கதிர் அறுத்து, கட்டு கட்டி, போர் அடித்து நெல்மகணிகளை பிரிக்க கூலி ஆட்களை பயன்படுத்தினால் நேரம் அதிகம் என்பதாலும், கூலி ஆட்கள் பற்றாக்குறையாலும், விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரத்தை நாடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகையால், டெல்டா மாவட்டம் முழுவதும் நெல் நன்கு விளைந்துள்ள வயல்களுக்கே நேரடியாக பயணிக்கும் நிலைக்கு நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கிரேடு ஏ ரக நெல் ஊக்க தொகையுடன் குவிண்டால் 1-க்கு ரூ.1660(1590+70=1660)
பொது ரக நெல் ஊக்க தொகையுடன் குவிண்டால் 1-க்கு ரூ.1600(1550+50=1600)
ஈரப்பதம் 17 சதவீகிதம் வரை உள்ள தரமான நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் தெரிவித்திருந்த நிலையில் கடும் பனிப்பொழிவால் அறுவடை செய்யும் நெற்கள் அனைத்தையும் எவ்வித காரணமும் கூறாமல் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்பாகும்.

-க.குமரன்.

Leave a Reply