பெல் (BHEL) நிறுவன அதிகாரி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!- திருவெறும்பூர் காவல் சரகத்தில் தொடரும் குற்றங்கள்!

_MG_0007 _MG_0005 _MG_0002

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பெல் (BHEL) நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் செல்வம் என்பவர், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேதாத்திரி நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், வீட்டில் இருந்த 60 சவரன் நகையையும் மற்றும் ரூ.50,000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுசம்மந்தமாக திருவெறும்பூர் காவல் துறையினர் விசாரணைச் செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக  திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத் திருட்டு, வழிப்பறி, பெண்களிடம் தாலிசெயின் பறிப்பு… ஆகியவை சர்வ சாதாரணமாக நடைப்பெற்று வருகிறது.

மேலும், திருவெறும்பூர் மற்றும் காட்டூர்  பகுதிகளில் கஞ்சா, பான்மசாலா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை கொடிக்கட்டி பறக்கிறது. 

டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறப்பதற்கு முன்பும், டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு சாத்திய பின்பும் மதுபானங்கள் பொது இடங்களில் தட்டுப்பாடு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் அனைத்தும் திருவெறும்பூர் காவல் துறையினருக்கு தெரிந்தேதான் நடைப்பெற்று வருகிறது.

குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய திருவெறும்பூர் காவல் துறையினர், தனிப்பட்ட ஆதாயத்திற்காக, குற்றவாளிகளிடம் மாமுல் வாங்கிக்கொண்டு மௌனமாக இருந்து வருகின்றனர்.

குற்றவாளிகளுக்கும், காவல் துறையினருக்கும் நெருக்கமான, இணக்கமான தொடர்பு இருக்கும் வரை குற்றங்களை தடுக்க முடியாது.

இதற்கு ஒரே வழி, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்து விட்டு, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் தனிப்படை அமைத்து, தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டால், குற்றங்களையும் தடுக்க முடியும்; குற்றவாளிகளையும் கைது செய்ய முடியும்.

-ஆர்.சிராசுதீன்.

-கே.பி.சுகுமார்.