தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி! ஜனவரி 23-ல் மின் உற்பத்தி!

தூத்துக்குடி அனல் மின் நிலையம்

மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளதால், தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தில் ஜனவரி 23-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதியளித்தன. அதன்படி, தூத்துக்குடி அருகே அரசுக்குச் சொந்தமான புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன், தமிழக மின்வாரியம் இணைந்து, தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் 1000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த புதிய அனல் மின் நிலையத்தில் முதல் அலகு மின் உற்பத்திக்குத் தயாராக உள்ள நிலையில், தற்போது நிலக்கரிக்கு பதிலாக சோதனை அடிப்படையில் டர்பன் எண்ணெய் மூலம் தினமும் 50 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய அனல் மின் நிலையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பி.கணேசன் @ இசக்கி.