சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் கோரிக்கையை ஏற்க முடியாது: நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கறார்! -ஜெ.ஜெயலலிதா மேல்முறையீட்டு விசாரணையின் முழு விபரம்!

 

Hon'ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

Hon’ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி மற்றும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோரின் கோரிக்கையை இன்று நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி நிராகரித்தார்.

JJ caseJJ casejan5

JJ case.png 05012015

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் தொடங்கியுள்ளது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானிசிங் ஆஜர் ஆனார்.

கடந்த 2 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தனி நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி விடுமுறையில் இருந்தார். இதனால் அன்றைய தினம் வழக்கை விசாரித்த நீதிபதி பில்லப்பா, 5 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுக்கள் தனி நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் இன்று (05.01.2015) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பு ஆட்சேபணை செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் தாம் புகார்தாரர் என்பதால் வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை வைத்தார்.

சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி, ஜாமீன் மனுவை காரணம் காட்டி வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை சேர்க்க முடியாது என்றும், வேண்டுமானால் அரசு தரப்புக்கு சுப்பிரமணியன் சுவாமி உதவியாக இருந்து செயல்படலாம் என்றும் கூறினார்.

இதனிடையே, இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்  என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு மீது ஆஜராகி வழக்கறிஞர் குமரேசன் வாதாடினார். 

அதற்கு பதில் அளித்த நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி, “இந்த வழக்கில் ஏற்கனவே உங்கள் தரப்பு வாதங்களும் பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையீடு  செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு விவாதத்தில் பலர் பங்கேற்றால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க முடியாது. எனவே, இதை ஏற்க முடியாது” என்று கூறி அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்தார்.

இதைத் தொடர்ந்து ஜெ.ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜர் ஆக இருக்கிறார். எனவே, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுவதும் படித்து பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பியதோடு, வழக்கை ஒத்திவைக்க கால அவகாசம் வழங்க முடியாது, விசாரணையை தொடருங்கள் என்று நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கூறினார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தொடர்ந்து வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணை  நாளை (06.01.2015) நடைபெறும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in